2-வது போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

ராய்ப்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.