பாமக: “இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" – கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்

ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கிறது என நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், “நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன்.

அன்புமணி
அன்புமணி

அன்புமணி சதித் திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது.

இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. இப்படி 46 ஆண்டு காலம் உழைத்துப் போராடி வளர்த்த கட்சியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத, உயிர் பறிபோன செயல். நான் கண்ணீர் வடிக்கிறேன், கலங்கி நிற்கிறேன்.” எனக் குறிப்பிட்டு பாமகவின் உரிமை கோரும் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அதில் ராமதாஸ் தரப்பு, “ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது” எனக் குற்றம்சாட்டியது.

பாமக ராமதாஸ்

அன்புமணி தரப்பில், “கட்சியின் தலைவராக பா.ம.க அன்புமணியை அங்கீகரித்துள்ளது” என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம்.

கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி, “பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. தனிப்பட்ட உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறி வழக்கை முடித்துவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.