முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார்.
தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு.
தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும்.
எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது.

சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள்.
ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன்.
மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார்.
இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார்.

தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம்.
தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார்.
பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது.
அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார்.
அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். – ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான்.
பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார்.
மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது.

அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க.
ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம்.
போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார்.
தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார்.
சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார்.
தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது.
சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம்.
அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும்.

காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் – ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார்.
அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என ‘சிவாஜி’-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். – தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!