புதுடெல்லி,
இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த சூழலில் புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது. பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.
பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும். இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும்” என்று அவர் கூறினார்.