மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார்.

சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற பாபர் மசூதியை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், பாபர் மசூதி கட்ட நன்கொடை கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர். விழாவிற்கு வந்த மத போதகர்களின் முன்னிலையில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸாரோ அல்லது ரிசர்வ் போலீஸ் படையோ பூமி பூஜையை தடுக்க முன்வரவில்லை.

பாபர் மசூதிக்கு பூமி பூஜை செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“எம்.எல்.ஏ. ஹிமாயூன் கபீர் மூலம் முஸ்லிம்களை மம்தா பானர்ஜி திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளார். ஹிமாயூன் கபீர் ஆதரவாளர்கள் பாபர் மசூதி கட்ட செங்கல் எடுத்துச் செல்கிறார்கள்.
அதோடு மேற்கு வங்க போலீஸார் தனக்கு துணையாக இருப்பதாக ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். இப்போது ஹிமாயூன் கபீரை சஸ்பெண்ட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இந்துக்களை ஹிமாயூன் கபீர் மிரட்டியபோது ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
போட்டியாக ராமர் கோயில்
பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார்.
முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார்.
அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்டது
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.