“எனக்கு சரியான வீடு கூட இல்லை'' – கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர்.

இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்றார்.

கேரம் போர்டு
கேரம் போர்டு

மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா – காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா – காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும், அப்துல் ஆசிக் ஒரு தங்கப் பதக்கமும் வென்றனர்.

இந்த நிலையில், பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆஷிக் அகிய ஐந்து பேரும் இன்று விமான மூலம் சென்னை வந்து அடைந்தனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரம் வீராங்கனை கீர்த்தனா
கேரம் வீராங்கனை கீர்த்தனா

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா கூறுகையில்,

” தமிழ்நாடு மற்றும் சென்னை கேரம் விளையாட்டு சங்கங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் நான் இந்த உலகக் கோப்பையில் எப்படி கலந்து கொண்டு விளையாடப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் அழைத்து ரூ.1.50 லட்சம் வழங்கினார்.

இதன் மூலமே நான் இந்த உலக கோப்பையில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.

முதல் முறையாக இந்திய நாட்டிற்காக விளையாடுது மிகவும் பெருமையாக உள்ளது. எனது பெற்றோர், குடும்பத்தார் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.

தமிழ்நாட்டில் கேரம் விளையாட்டு முன்பை விட அதிகம் வளர்ந்துள்ளது. மூன்று தங்க பதக்கங்களை தற்போது வென்று உள்ளம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தியாவிற்காக கேரம் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்க்க விரும்பினேன்.

கேரம் வீராங்கனை கீர்த்தனா

நாங்கள் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு தரப்பினர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.