தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம்.

அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை அருளி, அதை அவள் சுகமாகப் பிரசவிக்கும்வரை காத்து நிற்கிறாள், இந்த அன்னை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்துக்குத் தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும் எல்லா வாகன வசதிகளோடும் திருக்களாவூர் எனும் திருக்கருகாவூர் அமைந்துள்ளது.

திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி
திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி
(கர்ப்பரட்சாம்பிகை)

தலபுராணம்

இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது ஒரு புராண சம்பவம்.

நித்ருவர் என்ற முனிவர், தன் மனைவி வேதிகையுடன் இங்கே வசித்துவந்தார். ஒருமுறை வேதிகை கருவுற்று இருந்தபோது, அவசரமாக வருணனைக் காண வேண்டியிருததால் மனைவியை விட்டுவிட்டுச் சென்றார் முனிவர். அப்போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களுடைய ஆசிரமம் வந்து, பிக்ஷை கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி கொண்டு அயர்ந்து படுத்திருந்தபடியால் இவருடைய குரல் கேட்டும் எழுந்து வரமுடியவில்லை.

இதை அறியாத ஊர்த்துவபாதர், ‘ராச யட்சு’ என்ற நோயால் பாதிக்குமாறு சாபமிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் வேதிகையின் கரு கலைந்தது. வேதனை தாளாமல் அவள் திருக்கருகாவூர் ஈசனையும் அம்பிகையையும் வேண்டித் துதித்தாள்.

அம்பிகை கருணையே உருவானவள் அல்லவா, ஒரு தாய் தவிப்பதைப் பார்த்திருப்பாளா…

கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் வைத்து, குழந்தை ஜனிக்கும் நாள் வரை காப்பாற்றி வேதிகையிடம் சேர்த்தாள் அம்பிகை.

அம்பாள் காமதேனுவை அனுப்பிக் குழந்தைப் பால் கொடுக்கச் சொன்னாள். அப்போது காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதும் உண்டான குளமே பால் குளம் என்று அழைக்கப்பட்டு இன்று உள்ளது என்கிறார்கள்.

அதுமுதல் இத்தல அம்பிகை கருக்காத்த நாயகி என்றே அழைக்கப்படுகிறாள். இந்த ஆலயத்து வந்து மழலைப் பேறுவேண்டிக் கேட்பவர்களுக்கு வரம் அருளி தானே துணை நின்று நல்லமுறையில் பிரசவமாகவும் அருள்கிறாள் இந்த அம்பிகை.

முல்லைவனநாதர்

இத்தலம் முல்லைவனமாக இருந்தது. அதில் சுயம்புவாக எழுந்தருளிய ஈசனே முல்லைவனநாதர் எனப்பட்டார். ‘கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே!’ என்று இந்த ஈசனைப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.

வெட்டாற்றின் கரையில் முல்லைவனமாக இருந்த ஊர் வடமொழியில் மாதவி வனம் என்றும் அழைக்கப்பட்டது. அதனால் ஈசன் மாதவி வனேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.

புற்றுமண்ணால் ஆன இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகங்கள் கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. பஞ்சாரண்யத் தலங்களில் உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய தலம் திருக்கருகாவூர் இது.

திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்
திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்

சேக்கிழார், நால்வர் சந்நிதிகள், தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, ஆறுமுகர், பிரம்மன், துர்கை, சண்டிகேஸ்வரர் என்று இங்கு எண்ணற்ற சந்நிதிகள் உள்ளன. தல விருட்சமான முல்லைக்கொடி சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையே உள்ளது.

திருக்கருகாவூர் திருத்தலத்தில் இருக்கும் நான்கு தீர்த்தங்களும் விசேஷமானவை. கோயிலுக்கு எதிரே உள்ள பால் குளம், அடுத்து சத்தியகூபம் என்னும் தீர்த்தம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு இடையே உள்ளது.

ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்தம் பிரம்மனால் உருவானது. விருத்த காவிரி எனும் காவிரியின் கிளை நதியாகிய வெட்டாறுதான் நான்காவது தீர்த்தம். இதை ‘முள்ளிவாய்’ என்று கூறுகிறார்கள்.

சோமாஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கும் ஈசன், அம்பாள், மற்றும் அந்த சந்நிதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை ஒருசேர வலம்வருவது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

வளர்பிறை பிரதோஷ நாளில், இங்குள்ள ஈசனுக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகைச் சார்த்த அனுமதி கிடையாது. அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி, ரசீது பெற்றுக்கொண்டால் வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சார்த்தப்படும்.

மழலை வரம்தரும் வழிபாடு

குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும்.

அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 45 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும் என்பது இன்று வரை நடந்துவரும் அதிசயம்.

இங்கே நடைபெறும் தொட்டில் வழிபாடு விசேஷமானது. அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இங்குள்ள தங்கத் தொட்டிலில் தங்கள் பிள்ளையைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை வலம் வருகின்றனர்.

குழந்தை வரம் வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, வலம்வந்தால், குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும் என்கிறார்கள்.

திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி
திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி
(கர்ப்பரட்சாம்பிகை)

பிரார்த்தனை ஸ்லோகம்

‘ஸ்ரீமாதவி கானனஸ்தே – கர்ப்பரக்ஷாம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்…’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைத் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.