நடிகர் கார்த்தி 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை க்ரீத்தி ஷெட்டி, “நான் தமிழ்ல பேச முயற்சி செய்றேன். தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. இந்தப் படத்தின் மூலம் தமிழ் படத்துல அறிமுகமாகுறது எனக்கு ஆசிர்வாதமாகத் தோன்றுகிறது. அதற்கு நலன் சாருக்கு நன்றி.
இந்தப் படத்தில் நடிக்கும்போது இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தேன். காலையில் ஹைதராபாத், மாலையில் சென்னை என இருந்தேன். அதனால் ஒருமுறை செட்டில் எனக்கே தெரியாமல் அசந்து தூங்கிவிட்டேன். அப்போது லைட் மேன் அண்ணா முதல் அங்கு வேலை செய்த அனைவரும் எனக்காக சத்தமே இல்லாமல் வேலை செய்தார்கள்.
இதை நான் தூங்கி எழுந்ததும் அம்மாதான் என்னிடம் சொன்னார். அப்படியான அரவணைப்பு இந்த தமிழ் மக்களிடம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமும் அற்புதமாக வந்திருக்கிறது. இது எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் குறித்து நலன் சார் என்னிடம் சொல்லும்போது, நாம் ஒரு புது உலகை உருவாக்கப்போகிறோம். நிறைய புது முயற்சிகள் இருக்கும் என்றார்.
இந்தப் படம் அப்படித்தான் புது உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். நலன் சாருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ஆற்றல்மிக்க நபர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறேன். சில காட்சிகளில் நடிக்கும்போது சில விஷயங்களை என் கேரக்டர்காக செய்வேன். அதைக்கூட நுட்பமாக கவனித்து என்னைப் பாராட்டுவார்.
அது எனக்கு இன்னும் உத்வேகமளிப்பதாக இருந்தது. சத்யராஜ் சார் நடிக்கும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதையே பெருமையாகக் கருதுகிறேன். அவருடைய பெரிய ரசிகை நான். அவருடன் ஸ்கிரீனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நலன் சாரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் இறுதிவரை கிடைக்கவே இல்லை. நாம் சேர்ந்து இன்னொரு படத்தில் நடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் சிவகுமார் சாரின் ரசிகர்கள். கடந்த சில தினங்களாக மீடியாக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். நான் தமிழ்நாட்டுக்கு வந்த புதிய நடிகையாகவே தோன்றவில்லை. என்னை அப்படித்தான் நடத்தினார்கள்.
எல்லோருக்கும் தெரியும் நான் கார்த்தி சாரின் எவ்வளவு பெரிய ஃபேன். அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என் பெரிய கனவு நனவானதாகத் தோன்றுகிறது. அவரிடம் 5 நிமிடம் பேசினாலே அவர் மற்றவர் முன்னேற்றத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என புரியும். எல்லோருக்கும் நன்றி.” எனப் பேசினார்.