மும்பை,
அண்மையில் முடிவடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் தெண்டுல்கர் (100 சதம்) முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள்தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது” என்று கூறினார்.