சென்னையில் ‘JioHotstar South Unbound’ நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், ‘JioHotstar’ நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, “‘காட்டான்’ கதை என்னுடைய நண்பன் மணிகண்டன் எழுதியது. நான் என்ஜாய் செய்து இந்த சீரிஸில் நடித்தேன். மணிகண்டன் இதுவரைக்கும் ஆக்ஷன் கதையை எடுத்தது கிடையாது. இதுதான் முதல் முறை.

இந்த சீரிஸின் முதல் ஆறு பக்கத்தை படிக்கும்போது, அது எனக்குள் சென்று என்னை குணப்படுத்துவது போன்ற எண்ணத்தைக் கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.
‘கடைசி விவசாயி’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘காட்டான்’ வெப் சீரிஸில் நடிக்கிறார். இதனை அவரே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.