பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர சிலை திறப்பு; ரசிகர்கள் உற்சாக கோஷம்

கொல்கத்தா,

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டு உள்ளன. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் பங்கேற்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா பயணம் முடிந்ததும், மெஸ்சி பிற்பகலில் ஐதராபாத்துக்கு செல்கிறார். பின்பு, இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.