தர்மசாலா,
20 ஓவர் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் முதலில் ஆடி 175 ரன்கள் எடுத்த இந்திய அணி அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்காவை 74 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது. ஆனால் முந்தைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்னில் அடங்கி தோல்வியை சந்தித்தது. திலக் வர்மா (62 ரன்) தவிர பேட்டிங்கில் யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படியாக அமையவில்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சு எடுபடவில்லை. அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் கைப்பற்றாததுடன் முறையே 54, 45 ரன்களை வாரி வழங்கினர்.
சொதப்பும் சூர்யகுமார், கில்
இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவாக உள்ளது.
அவர்கள் இருவரும் தங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து விமர்சனத்துக்கு விடைகொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அவர்கள் கணிசமாக பங்களித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
தென்ஆப்பிரிக்கா எப்படி?
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், டோனோவன் பெரேரா, டேவிட் மில்லரும் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, ஓட்னில் பார்த்மேன், லுதோ சிபாம்லா, மார்கோ யான்சென் வலுசேர்க்கின்றனர்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 33 ஆட்டங்களில் ஆடி 13 வெற்றிகளை பெற்று இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் கிடைத்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடன் களம் காணும். அதேநேரத்தில் முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
தர்மசாலா மைதானத்தில் இந்திய அணி இதுவரை மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் இலங்கைக்கு எதிரான 2 ஆட்டங்களில் வெற்றியும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் தோல்வியும் சந்தித்து இருக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிவால்ட் பிரேவிஸ், டோனோவன் பெரேரா, டேவிட் மில்லர், ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், லுதோ சிபாம்லா, லுங்கி இங்கிடி, ஓட்னில் பார்த்மேன்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.