sanju samson : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கான வாய்ப்பை கொடுக்காமல் பெஞ்சில் உட்கார வைத்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இதனால், அவர் மீது முன்னாள் பிளேயர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
இதுகுறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் பிளேயர் முகமது கைஃப், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளித்துவிட்டு, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். துணைக் கேப்டனாக இருக்கும் கில்லுக்காக அணித் தேர்வில் ‘இரட்டை நிலைப்பாடு’ இருக்கக் கூடாது என்றும் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
முகமது கைஃப் வலியுறுத்தல்
டி20 உலகக் கோப்பை 2026-க்கு ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அணியில் மீண்டும் இடம்பிடித்த கில், சிறப்பாக விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இது குறித்து முகமது கைஃப் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “சுப்மன் கில் எப்படி அவுட் ஆகிறார் என்று பாருங்கள். ஸ்லிப்பில் கேட்ச் ஆகிறார், அதிரடியாக ஆட வேண்டும் என்பதற்காக பந்தை தவறாக டைமிங் செய்து அவுட் ஆகிறார். இப்போது அணியில் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்கும் அபிஷேக் ஷர்மாவைப் போல ஆட முயற்சிக்கிறார். ஆனால், ரிசல்ட் இல்லை. இப்போது அவருக்கு ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு, சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்க வேண்டும்
தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதைக் குறித்துப் பேசிய கைஃப், “சஞ்சு சாம்சன் ஒரு தரமான வீரர். அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2024 ஆம் ஆண்டில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக அவர் ஐந்து டி20 இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் அடித்துள்ளார். டி20 வரலாற்றில் வேறு யாரும் செய்யாத ஒரு சாதனை இது. ஆனால், அவருக்கு மட்டும் மிகக் குறைந்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன, மற்றவர்களுக்கோ தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், இப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
துணை கேப்டனை நீக்குவது தவறல்ல
அணித் தேர்வில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று வலியுறுத்திய முகமது கைஃப், கில் துணைக் கேப்டனாக இருந்தாலும், அணி நலனுக்காக அவரை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.”அணித் தேர்வில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. இதற்கு முன்பு கூட துணைக் கேப்டன்கள் நீக்கப்பட்டுள்ளனர். அணி நலனுக்காக கில்லுக்கு ஓய்வு அளித்துவிட்டு, வேறு ஒருவரை அணியில் கொண்டுவந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை” என்று கைப் ஆவேசமாகக் கூறினார். கில்லின் சமீபத்திய மோசமான ஃபார்முக்கு அவர் ஒரே நேரத்தில் அதிகப் பொறுப்புகளைச் சுமப்பதுதான் காரணம் என்றும் கைப் குறிப்பிட்டுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு அழுத்தம்
“சுப்மன் கில்லுக்கு ஒரே நேரத்தில் அதிகப்படியான பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் கேப்டன்சி, ஒருநாள் கேப்டன்சி, டி20 துணைக் கேப்டன்சி என இவ்வளவு அழுத்ததை எந்த வீரராலும் ஒரே நேரத்தில் தாங்க முடியாது. இது சாத்தியமற்றது. பொறுப்புகள் படிப்படியாகவே வழங்கப்பட வேண்டும். ஐபிஎல் நிலைமைகளும், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிரான சர்வதேசப் போட்டிகளின் நிலையும் முற்றிலும் வேறுபட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு பொறுப்புகள் கொடுக்கப்பட்டதால் தான், முன்பு அவருக்கு கழுத்தில் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் வந்தன. அது வேலைப்பளுவின் சுமை காரணமாக வந்ததுதான். தொடர்ந்து ஒரு வீரரால் உச்ச நிலையில் இருக்க முடியாது” என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்த ஒரு வீரரை சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுப்பார்கள்! ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | 2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More