Vaibhav Suryavanshi Ineligible: 2025-ம் ஆண்டின் கிரிக்கெட் உலகை தனது அசாத்திய பேட்டிங் திறமையால் திரும்பி பார்க்க வைத்தவர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi). பீகாரை சேர்ந்த இந்த 14 வயது இடது கை ஆட்டக்காரர், களத்தில் இறங்கினாலே பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்க விடுகிறார். ஐபிஎல், ரஞ்சி டிராபி, சையது முஷ்டாக் அலி டிராபி என அனைத்து வடிவங்களிலும் சதங்களை விளாசி தள்ளும் இவர், இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார். ஆனால், ஒரு முக்கியமான ஐசிசி விதிமுறை இவரது கனவுக்கு தற்காலிக தடையாக நின்று கொண்டிருக்கிறது.
Add Zee News as a Preferred Source

ஐசிசி-யின் வயது வரம்பு விதிமுறை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. ஆண்கள், பெண்கள் அல்லது அண்டர்-19 என எந்த வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாட, ஒரு வீரருக்கு குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான அழுத்தங்களையும், உடல் ரீதியான சவால்களையும் எதிர்கொள்வது அவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கலாம் என்பதால் இந்த விதி கொண்டுவரப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷியின் நிலை
மார்ச் 27, 2011ல் பிறந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, தற்போது 14 வயது மட்டுமே ஆகிறது. அவர் 15 வயதை எட்ட இன்னும் சில மாதங்கள் அதாவது மார்ச் 27, 2026 வரை காத்திருக்க வேண்டும். எனவே, அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், இந்திய தேர்வுக் குழுவால் அவரை இப்போதைக்கு சீனியர் அணிக்கு தேர்வு செய்ய முடியாது.
வைபவ் சூர்யவன்ஷி சாதனைகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, 2025 ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனைகள் சாதாரணமானவை அல்ல.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். யூசுப் பதான் (37 பந்துகள்) சாதனையை முறியடித்த இவர், உலக அளவில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் நடந்த அண்டர்-19 ஆசியக் கோப்பையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 171 ரன்கள் (95 பந்துகளில்) குவித்து தனி நபர் அதிகபட்ச ரன் சாதனையை முறியடித்தார்.

புள்ளிவிவரங்கள்
ஐபிஎல்: 7 போட்டிகளில் 252 ரன்கள், 24 சிக்ஸர்கள், ஸ்ட்ரைக் ரேட் 206.55.
டி20: 18 போட்டிகளில் 701 ரன்கள், 3 சதங்கள்.
First Class: 8 போட்டிகளில் 207 ரன்கள்.
விதிவிலக்கு சாத்தியமா?
ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரரின் திறமை மற்றும் முதிர்ச்சி அபரிமிதமாக இருந்தால், அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் சிறப்பு அனுமதி கோரலாம். ஆனால், பிசிசிஐ இதுவரை வைபவ் சூர்யவன்ஷிக்காக அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை. எனவே, அவர் தனது 15-வது பிறந்தநாள் வரை காத்திருப்பது கட்டாயமாகிறது. சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே அந்த வாய்ப்பை பெறுவார் என்று கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
About the Author
RK Spark