ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்பட்ட மதீஷா பத்திரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். மதீஷா பத்திரனாவை வாங்க பல அணிகள் போட்டி போட்டன. ஆனால், கேகேஆர் அணி எதையும் விட்டு கொடுப்பதாக இல்லை. இறுதியில் ஒரு மிகப்பெரிய தொகையான ரூ. 18 கோடியை கொடுத்து அவரை தட்டித் தூக்கியது. தோனியின் நம்பிக்கைக்குரிய வீரராகவும், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாகவும் இருந்த பத்திரனா, 2022 முதல் 2025 வரை சிஎஸ்கே அணியில் முக்கிய பங்காற்றினார். அவரை தக்கவைக்க முடியாதது சென்னை ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
Add Zee News as a Preferred Source

பத்திரனாவின் பயணம்
2022-ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த இவர், தனது தனித்துவமான பந்துவீச்சு முறையால் அனைவரையும் கவர்ந்தார். கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். மொத்தம் 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போது ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், மூத்த பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பத்திரனா பந்து வீசவுள்ளார். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இவரது யார்க்கர்கள் எப்படி எடுபட போகின்றன என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பதிரானா எமோஷனல் பதிவு
சென்னை அணியில் இருந்து வெளியேறிய நிலையில், பதிரானா இன்ஸ்டாகிராமில் எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு கனவு மட்டும் உடைய சிறுவனாக இருந்த என்னை, இன்று மஞ்சள் ஜெர்சியை பெருமையாக அணியும் நிலைக்கு கொண்டு வந்த பயணம் இது. கிரிக்கெட்டை காட்டிலும் அதிகமானவற்றை சிஎஸ்கே எனக்கு கொடுத்தது – அது எனக்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை, என்றும் மதிப்புடன் நினைத்து கொள்வதற்கான ஒரு குடும்பத்தையும் அளித்தது. 2022 முதல் 2025 சீசன் முடியும் வரை மஞ்சளில் கழித்த ஒவ்வொரு தருணமும் என்னை ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் வடிவமைத்தது.
சிஎஸ்கேக்காக என் கடைசி சீசனை ஒரு சிறப்பு நினைவாக முடிக்க, கடைசி வரை எனக்குள்ளிருந்த அனைத்தையும் தர, இந்த அற்புதமான அணிக்காக 50 விக்கெட்டுகள் எட்ட வேண்டும் என்பது தான் எப்போதுமே என் ஆசை. துரதிர்ஷ்டவசமாக அதை நனவாக்க முடியவில்லை. ஆனால் அந்த கனவும், அதற்காக எடுத்த ஒவ்வொரு முயற்சியும் எப்போதும் இதயத்திலிருந்து வந்தவையே. என்னை நம்பி வழிகாட்டியும் நம்பிக்கையையும் அளித்த தோனிக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் மேல் நம்பிக்கை வைத்து துணை நின்ற காசி சார் மற்றும் மேலாண்மை குழுவிற்கும், சகோதரர்களை போல என்னுடன் இருந்த எனது அணைத்துணைகளுக்கும், என் உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னை ஆதரித்து வந்த ஒவ்வொரு நம்பிக்கையுள்ள சிஎஸ்கே ரசிகருக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன்.
உங்களின் அன்பே எனக்கு எல்லாமாக இருந்தது. சென்னை எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடம் பிடிக்கும். சென்னை எப்போதும் என் இல்லமாகவே உணரப்படும்; மஞ்சள் நிறம் என் இதயத்தில் என்றென்றும் ஒரு தனி இடம் பெற்றே இருக்கும். மரியாதை, நன்றியுணர்வு, பெருமை ஆகியவற்றுடன், இப்போது நான் அந்த பக்கத்தை முடித்து, கேகேஆர் அணியுடன் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். நன்றி சிஎஸ்கே. நன்றி சென்னை. என்றும் நன்றியுடன்” என்று பதிவிட்டுள்ளார்.
About the Author
RK Spark