ஐபிஎல் புதிய விதி! 18 கோடிக்கும் மேல் ஒரு பிளேயரை ஒப்பந்தம் செய்ய முடியாதா?

IPL new rule  : ஐபிஎல் 2026 மினி ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, பிசிசிஐ (BCCI) ஒரு அதிரடியான புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இது ரசிகர்களிடமும், கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 கோடி மட்டுமே சம்பளம் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வெளிநாட்டு வீரர் ரூ. 18 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போனாலும், அவர் அதிகபட்சமாக 18 கோடி மட்டுமே சம்பளமாகப் பெறுவார். மீதமுள்ள தொகை பிசிசிஐ-இன் Player Welfare Fund -க்கு சென்றுவிடும்.

Add Zee News as a Preferred Source

ரூ.18 கோடி நிர்ணயம் ஏன்?

வெளிநாட்டு வீரர்களுக்கான இந்த சம்பள உச்சவரம்பு (Salary Cap) இந்திய வீரர்களின் அதிகபட்ச விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஏலத்தைப் பொறுத்தவரை, இந்த உச்சவரம்பு கீழ்க்கண்ட இரண்டு அளவுகளில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய பிளேயர்களின் அதிகபட்ச தக்கவைப்பு (Retention) தொகை ரூ. 18 கோடி ஆக உள்ளது. ஆனால், ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு ஏலம் போனார். இந்த இரண்டு அளவுகோல்களில் எது குறைவாக இருக்கிறதோ, அதுவே, வெளிநாட்டு பிளேயர்களுக்கு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டில் குறைவான தொகை 18 கோடி ரூபாய். வெளிநாட்டு வீரருக்கு இந்த மினி ஏலத்தில் அதிகபட்சமாக 18 கோடி மட்டுமே சம்பளமாக வழங்க முடியும்.

உதாரணமாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஒரு அணி 22 கோடிக்கு ஏலம் எடுத்தாலும், அவருக்கு சம்பளமாக செல்வது 18 கோடி மட்டுமே. மீதமுள்ள 4 கோடி பிசிசிஐயின் வீரர் நல நிதிக்குச் சென்றுவிடும். ஆனாலும், ஏலம் எடுத்த அணி தன் பட்ஜெட்டில் இருந்து 22 கோடியையும் செலவு செய்தாக வேண்டும்.

இந்த அணுகுமுறையின் பின்னணி

இந்த புதிய விதி உருவாக்கப்பட முக்கியக் காரணம், இந்திய வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் மினி ஏலங்களில் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்குப் போவதைத் தடுப்பதுதான். சமீபத்திய ஆண்டுகளில், மினி ஏலங்களில் சில வெளிநாட்டு வீரர்கள் அபரிமிதமான விலைக்கு ஏலம் போயினர். உதாரணமாக, ஒரு சீசனில் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கும், பாட் கம்மின்ஸ் 20.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். இது இந்திய வீரர்களின் சம்பள மதிப்பை விட அதிகமாக இருந்தது.

உரிமையாளர்களே (Franchises) இந்த விதியை பிசிசிஐயிடம் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலங்களைத் தவிர்த்து, மினி ஏலங்களில் வேண்டுமென்றே நுழைந்து, அதிக விலையைப் பெறுவதாகப் புகார் எழுந்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்தான் பிசிசிஐ இந்த புதிய விதியுடன் களமிறங்கியுள்ளது.

விதியை மீறினால் தடை

இந்த விவாதத்துக்குரிய ரூ.18 கோடி உச்சவரம்புடன் சேர்த்து, பிசிசிஐ மேலும் இரண்டு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, போட்டியில் இருந்து விலகினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் விளையாடத் தடை விதிக்கப்படும். மெகா ஏலத்தில் பங்கேற்காமல், வெளிநாட்டு வீரர்கள் இனி மினி ஏலத்தில் மட்டும் நுழைய முடியாது. இந்திய பிளேயர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு இந்திய பிளேயர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிருப்தி என்ன?

அதேநேரத்தில் இந்த விதிமுறைக்கு வெளிநாட்டு பிளேயர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. ஐபிஎல்லை விட அதிக தொகை மற்ற வெளிநாட்டு டி20 லீக்குகளில் கிடைத்தால், அவர்கள் வரும் காலங்களில் அந்த லீக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், காலப்போக்கில் ஐபிஎல் தொடர்களில் வெளிநாட்டு ஸ்டார் பிளேயர்களின் பங்கேற்பு குறையும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.