Sanju Samson : இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இப்போட்டியிலாவது சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா? என்ற கேள்வி இருக்கும் நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விளாசி தள்ளியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பிளேயர் ராபின் உத்தப்பா. சாம்சன் அப்படி என்ன தப்பு செய்தார்? என ஆவசேமாக உத்தப்பா கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரர் இடத்தைப் பிடிப்பதில் தற்போது பெரும் போட்டி நடந்து வருகிறது. ஒருபுறம் அபிஷேக் சர்மா அதிரடி காட்ட, மறுபுறம் துணைக் கேப்டன் சுப்மன் கில் தனது பார்மை மீட்டெடுக்கப் போராடி வருகிறார். ஆனால், இந்த இரண்டு பேருக்கும் நடுவில், ஹாட்ரிக் சதங்களை விளாசியும் சஞ்சு சாம்சன் அணியில் ஓரங்கட்டப்படுவது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகக் குரல் எழுப்பியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
சாம்சனை ஏன் ஓரம்கட்டுகிறீர்கள்?
கடந்தமுறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அபாரமான தொடக்கத்தைத் தந்தது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது அசாத்தியமான பேட்டிங் மூலம் மூன்று சதங்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் அடுத்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்ற கேள்விக்கு தனது பேட் மூலம் சஞ்சு பதிலளித்தார். ஆனால், திடீரென அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் உள்ளே வந்தவுடன், சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து நீக்கப்பட்டு மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். தற்போது பிளேயிங் லெவனில் இருந்தே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ராபின் உத்தப்பாவின் கேள்விகள்!
இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா கூறுகையில், “அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஜோடி அப்படி என்ன தவறு செய்தது? ஏன் அவர்களைப் பிரிக்க வேண்டும்? சஞ்சு சாம்சன் தான் முதலில் சதம் அடித்து மற்ற இளம் வீரர்களுக்கு ஒரு சவாலை உருவாக்கினார். அவருக்குப் பிறகுதான் அபிஷேக் சர்மாவும், திலக் வர்மாவும் சதம் அடித்தனர். ஒரே வருடத்தில் மூன்று சதங்களை விளாசிய ஒரு வீரரை, திடீரென மிடில் ஆர்டருக்கு அனுப்பி, பின் அணியை விட்டே தூக்குவது எந்த விதத்தில் நியாயம்? சஞ்சு சாம்சன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்மன் கில்லின் தடுமாற்றம் – காரணம் என்ன?
சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து விமர்சித்த உத்தப்பா, அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆடாமல் அபிஷேக் சர்மாவைப் போல அதிரடி காட்ட முயல்வதுதான் அவரது வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். “சுப்மன் கில் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட நினைக்கிறார். அது அவரது பாணி அல்ல. அவர் முதலில் 10 பந்துகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆடுபவர். இப்போது சஞ்சு சாம்சன் போன்ற ஒரு பெரிய பிளேயர் வெளியே காத்துக் கொண்டிருப்பதால், அந்த அழுத்தம் கில்லைத் தவறான ஷாட்களை ஆடத் தூண்டுகிறது” என உத்தப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
கௌதம் கம்பீருக்கு நெருக்கடி?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சுப்மன் கில்லை நீண்ட காலத் திட்டமாகப் பார்க்கின்றனர். ஆனால், திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும் சஞ்சு சாம்சனின் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More