சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை’. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி.

`டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை’. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை’ தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம்
`டாணக்காரன்’ கதை வேறு… அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் வேறு. இந்த சிறை கதாபாத்திரம் வேறு. உங்களைப்போல நானும் ஒரு ஆடியன்ஸ்தான். வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பேன். என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். `இவன் வேற மாதிரி’ – `அரிமா நம்பி’ இரண்டும் திரில்லர்தான்.

ஆனால் அடுத்தடுத்து வந்ததால ஒரே மாதிரியான படம்னு தோன்றியிருக்கலாம். இதற்கு நடுவில் ஒரு படம் நடித்தேன். அது அப்போது வெளியாகவில்லை. ஒரே மாதிரியான கதை எடுத்தால் எனக்கே போர்அடிச்சிரும். வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரம் `டாணாக்காரன்’ படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது முதல் கடுமையான உழைப்பைப் போட்டு படம் முடித்தோம். அதை தியேட்டரில் கொண்டுவர கடுமையாக கஷ்டப்பட்டோம். ஆனால் முடியவில்லை. இப்போது அதேப் படக்குழுவின் இந்தப் படம் தியேட்டரில் வருகிறது அதுவே மகிழ்ச்சி.