மும்பை கடற்பகுதியில் எப்போதும் சாக்கடை கழிவுகள் சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் மும்பை கடல் நீர்கூட வழக்கமான நிறத்தில் இல்லாமல் கறுப்பு நிறத்தில் இருக்கும். அப்படிப்பட்ட கடல் பகுதிக்கு அதிர்ஷ்டவசமாக டால்பின் மீன்கள் வந்துள்ளன. மும்பை ஒர்லி கடற்கரை பகுதியில் இந்த டால்பின் மீன்கள் கூட்டம் கூட்டமாக தென்பட்டன. கடற்கரையில் கூடி இருந்த பார்வையாளர்கள் அவற்றைக் கண்டு ஆச்சர்யமடைந்து தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். டால்பின்கள் தண்ணீருக்குள் செல்வதும், மேலே வருவதுமாக இருந்த காட்சி மிகவும் அழகாக இருந்தது. அந்த நேரம் டால்பின் மீன்களுக்கு மேலே கடல் பறவைகள் பறந்த காட்சி, அதற்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது.

பார்வையாளர்கள் டால்பின் கூட்டத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்து, மும்பையில் தண்ணீர் சுத்தமாகிவிட்டது. அதனால்தான் டால்பின்களின் வருகை தொடங்கி இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸியை பார்க்க வந்திருக்கும் என்று ஜோக்காக குறிப்பிட்டுள்ளார்.
சுத்தமான தண்ணீரில்தான் டால்பின்கள் நடமாட்டம் இருக்கும். கடைசியாக 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் மும்பை கடற்கரைக்கு டால்பின்கள் வந்தன. அதன் பிறகு இப்போதுதான் வந்திருக்கின்றன. மகாராஷ்டிராவில் டால்பின்கள் கொங்கன் கடற்கரை பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. அங்கு அடிக்கடி பொதுமக்கள் கண்களில் டால்பின்கள் தென்படுவதுண்டு.