Mohammed Shami : Mohammed Shami : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இதனால், அவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) சமீபத்தில் அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் முகமது ஷமியின் பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ள அணியில், இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த ஷமி மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுப் போட்டிகளில் அபார பார்ம்
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு காயத்தால் அவதிப்பட்டு வந்த ஷமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது முழு உடற்தகுதியுடன் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி (SMAT 2025) டி20 தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர், சர்வீசஸ் அணிக்கு எதிராக வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார்.
இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தான் இன்னும் பழைய வேகத்துடனேயே இருப்பதை நிரூபித்தார். ரஞ்சிக் கோப்பையிலும் 4 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இவ்வளவு சிறப்பான செயல்பாடுகள் இருந்தும், “உடற்தகுதி மற்றும் போதிய மேட்ச் பிராக்டிஸ் இல்லை” என்ற காரணத்தைக் கூறி அவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஷமியின் பதிலடி
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஷமி, “எனது ஓய்வு குறித்துப் பேசுபவர்கள் யார்? நான் சலிப்படையும்போது நானே விலகிவிடுவேன். சர்வதேச அணியில் என்னைத் தேர்வு செய்யாவிட்டாலும், நான் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே தனது கடைசி லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முடிவுக்கு வருகிறதா ஷமியின் சகாப்தம்?
தற்போது 35 வயதாகும் ஷமி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்படாவிட்டால், 2027 உலகக் கோப்பை கனவும் கேள்விக்குறியாகலாம். இருப்பினும், ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக அவர் விளையாட உள்ளது, அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஷமி, மீண்டும் ப்ளூ ஜெர்சியில் களமிறங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More