Shubman Gill: டி20 அணியில் மட்டும் இல்லை! கில்லுக்கு பிசிசிஐ வைத்த செக்!

கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வருங்கால கேப்டனாக கருதப்பட்ட வரும், அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில், உலக கோப்பை போன்ற மிகமுக்கியமான தொடரிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

அதிரடி நீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லின் நீக்கம் குறித்துத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர். முக்கியமாக இரண்டு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. ஒன்று சுப்மன் கில்லின் சமீபத்திய மோசமான பார்ம், மற்றொன்று அணியின் சமநிலை. சுப்மன் கில் கடந்த சில டி20 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முறையே 4, 0 மற்றும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறினார். ஒரு பெரிய தொடருக்கு செல்லும்போது, வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத் திறனில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் கில்லின் சமீபத்திய சறுக்கல்கள் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன.

விக்கெட் கீப்பர்

கில்லின் நீக்கத்திற்கு பின்னால் உள்ள மற்றொரு மிக முக்கிய காரணம் அணியின் சமநிலை மற்றும் விக்கெட் கீப்பர்களின் தேவை. தேர்வுக்குழுவினர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கக்கூடிய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளித்துள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாகவும் செயல்படக்கூடியவர்கள் என்பதால், பிரத்யேக தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லிற்கான இடம் கேள்விக்குறியானது. “எங்களுக்கு தொடக்க வரிசையில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அந்த இடத்தை பூர்த்தி செய்கின்றனர். அணியின் சமநிலையை கருத்தில் கொண்டே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டது,” என்று அகர்கர் விளக்கினார். 

துணை கேப்டனாக அக்‌ஷர் படேல்

சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அணியின் துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் அக்‌ஷர் படேல் துணை கேப்டனாக செயல்படுவார். இது அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடியாக விளையாடி 500-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த இஷான் கிஷன் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை சுப்மன் கில்லின் இடத்திற்கு பெரும் போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில்லின் இந்த நீக்கம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், டி20 வடிவத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் கன்சிஸ்டன்சி குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இருப்பினும், வருங்கால கேப்டன் என்று அழைக்கப்பட்ட ஒருவரை இப்படி ஒரு முக்கிய தொடரிலிருந்து கழற்றிவிட்டது பிசிசிஐ எடுத்த மிகத் துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் அணியிலும் இதே நிலைமையா?

டி20 உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம் சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சறுக்கலாக தோன்றினாலும், இது ஒரு தற்காலிக பின்னடைவே என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது பேட்டிங் திறனை மீண்டும் நிரூபித்து அணிக்குள் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல துடிக்கும் வேளையில், கில் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் படை களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் அவரது இடத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. பிசிசிஐ எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா அல்லது கில்லின் நீக்கம் அணியின் பேட்டிங்கை பலவீனப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.