Sreenivasan: "அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது!" – பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Sreenivasan
Sreenivasan

அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?

துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசஃப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது.

அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.

ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த பார்த்திபன் அதனை ரத்து செய்துவிட்டு ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரளா விரைந்திருக்கிறார். அது குறித்து அவர், “இரவு 11 மணிக்கு கோச்சி வந்து சேர்ந்தேன். எங்கு தங்குவது என்றே தெரியவில்லை.

ஸ்ரீனிவாசன் சாரின் வீட்டருகில் ஒரு சாதாரண மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். இன்று துபாய்க்குப் போகவிருந்தேன்.

விமானத்தையும் ஹோட்டலையும் ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு கிளம்பினேன். மனதளவில் எங்கிருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம்.

நடிகர் பார்த்திபன்
பார்த்திபன்

இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்து வந்தது. ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் ஏதோ ஒன்று வலுவாகத் தாக்கியது.

ஒரு பக்கம் மோகன்லால், மம்மூட்டி, திலீப் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். நான் வாழ்க்கையில் பணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் முன் நின்றது பணமல்ல, பெரிய படைப்பாளியும், மிகுந்த மரியாதைக்குரியவரும் என் முன்னிருந்தார்கள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.