"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" – லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள்” என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

லலித் மோடி - விஜய் மல்லையா
லலித் மோடி – விஜய் மல்லையா

மேலும், “மீண்டும் இணையத்தையே ஒரு உலுக்கு உலுக்கப் போகிறேன் (அதிர வைக்கப் போகிறேன்). இதோ உங்களுக்காக ஒன்று. இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள்!” எனத் தலைப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியானது முதல் இந்தியர்களிடையே கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பதிவர் ஒருவர், “இந்திய அரசாங்கத்தையும் அதன் சட்ட அமைப்பையும் இவர்கள் எவ்வளவு கேலி செய்கிறார்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இவர்கள் இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைப் பார்த்து பகிரங்கமாகச் சிரிக்கிறார்கள். இது இந்தியச் சட்டத்திற்கு நேர்ந்த அவமானம்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 2016-ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். 2019-ல் அவர் ‘தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி’யாக அறிவிக்கப்பட்டார்.

லலித் மோடி ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ.125 கோடிக்கும் மேல் கையூட்டு பெற்றது மற்றும் பணமோசடி புகார்களுக்கு மத்தியில், 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார்.

தற்போது இவர்கள் இருவரும் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும், அதை வீடியோவாக வெளியிட்டு இந்தியாவைச் சீண்டுவதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.