புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்…’

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

அத்துடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட துணைநிலை ஆளுநர், சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார்.

இது மக்களின் உயிர் தொடர்பான விவகாரம் என்பதால் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழல் இது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

போலி மருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்யும் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் தலைமையிலான போலீஸார்

ரூ.10,000 கோடிக்கு போலி மருந்துகள்.!

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்திருக்கின்றனர். ரூ.10,000 கோடி அளவுக்கு போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

அதற்காக பல பேருக்கு பலநூறு கோடிகள் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கைதாகியிருக்கும் முக்கியக் குற்றவாளியான ராஜா, சட்டப்பேரவை தலைவருக்கு நீல நிற சொகுசு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் தீபாவளிக்கு அவரது தொகுதியில் பரிசுப் பொருள் கொடுப்பதற்காக ரூ.42 லட்சம் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் சட்டப்பேரவைத் தலைவர், குற்றவாளி ராஜாவிடம் நேரடியாக கையூட்டு பெற்றிருக்கிறார்.

`அக்கா’ அடைமொழியைக் கொண்டவர் வாங்கிய லஞ்சம்

இதன்பிறகும் அவர் சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் நீடித்தால், பல ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடக்கும். அதனால் அவர் பதவி விலக வேண்டும். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிதான் சுகாதாரத்துறைக்கும் அமைச்சர். அவரது துறையில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

அதனால் இதற்கு பொறுப்பேற்று அவரும் ராஜினாமா செய்ய வேண்டும். `அக்கா’ அடைமொழியைக் கொண்டவர் மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த சத்தியவேந்தன் ஆகியோரும் கையூட்டு பெற்றிருக்கின்றனர்.

இப்படி பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் போலி மருந்து கும்பலிடம் கையூட்டு பெற்றிருக்கின்றனர். முதல்வர் ரங்கசாமிக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்தது யார் என்று அவர் தெரிவிக்க வேண்டும்.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம், முதலமைச்சர் ரங்கசாமி

`முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்…’

அமைச்சர் நமச்சிவாயத்திடம்தான் தொழில்துறை இருக்கிறது. அந்தத் துறையின் அனுமதியின்றி போலி மருந்துத் தொழிற்சாலைகள் இயங்கி வந்திருக்கின்றன. அதனால் அவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

சி.பி.ஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்தும்போது, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து அழுத்தம் வரக் கூடாது. அதனால்தான் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சி.பி.ஐ விசாரணை எந்தவித அழுத்தமுமின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும். அதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மேற்பார்வையில் விசாரணை தொடர வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.