Virat Kohli : இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை இன்று கோலாகலமாகத் தொடங்கியது. பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின்படி, முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோஹித் சர்மாவும் களமிறங்கி வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளனர்.
Add Zee News as a Preferred Source
விராட் கோலி: 16,000 ரன்கள் சாதனை
பெங்களூருவில் நடைபெற்ற ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 299 ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் தனது முதல் ரன்னை எடுத்தபோது, கோலி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களைக் கடந்தார். சச்சின் டெண்டுல்கர் 21,999 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
விராட் கோலி அதிரடி சதம்
உலக அளவில் 16,000 ரன்களைக் கடந்த 9-வது வீரர் கோலி ஆவார். கிரஹாம் கூச், விவ் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் அவர் இணைந்தார். 299 ரன் இலக்கை நோக்கி ஆடிய கோலி, தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷத்தைக் காட்டினார். வெறும் 83 பந்துகளில் சதம் கடந்த அவர், 85 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 11 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். இது கோலியின் 58 வது லிஸ்ட் ஏ சதம் ஆகும். சச்சினின் 60 சதங்கள் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 3 சதங்களே தேவை.
ஜெய்ப்பூரில் ‘ஹிட்மேன்’ நடத்திய சிக்ஸர் மழை
மும்பை மற்றும் சிக்கிம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் சிக்கிம் நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை மும்பை அணி ‘மின்னல் வேகத்தில்’ எட்டியது. ரோஹித் சர்மா தனது பழைய அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிரூபித்தார். 26 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 பந்துகளில் சதம் விளாசினார். மொத்தம் 94 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 155 ரன்கள் குவித்தார். இதில் 18 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164.89 ஆக இருந்தது. ரோஹித்தைக் காண ஜெய்ப்பூர் மைதானத்தில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதால், மைதானம் நிரம்பி வழிந்தது. அவர் அவுட் ஆகி வெளியேறும்போது ஒட்டுமொத்த மைதானமே எழுந்து நின்று கைதட்டி கௌரவித்தது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் 21,999 ரன்கள், 60 சதம்
விராட் கோலி – 16,106* ரன்கள், 58 சதம்
சௌரவ் கங்குலி – 15,622 ரன்கள், 31 சதம்
ராகுல் டிராவிட் – 15,271 – 21 சதம்
ரோஹித் சர்மா – 13,672* ரன்கள், 33 சதம்
50 ஓவர் போட்டிகளில் கோலியின் சராசரி 57க்கும் அதிகமாக உள்ளது. இது 16,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களிலேயே மிக அதிகமான சராசரியாகும்.
விராட் கோலிக்கு இந்த இன்னிங்ஸ் ஏன் முக்கியமானது?
விராட் கோலி சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே தொடருக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக 2010-11 ஆம் ஆண்டில் அவர் விளையாடியிருந்தார். ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, இந்த ஒருநாள் போட்டிகள் கோலி மற்றும் ரோஹித்திற்கு சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது. அத்துடன் 2027 ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற தீர்மானத்துடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருக்கின்றனர். அதனால், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தங்களின் பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். இதற்கு நல்ல வாய்ப்பாக விஜய் ஹசாரே தொடர் அமைந்துள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் போட்டியிலேயே சதமடித்து சிறப்பாக தொடங்கியுள்ளனர்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More