நாட்டில் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெறுவது சிறந்தது – சந்திரபாபு நாயுடு

திருப்பதி,

திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆஞ்சநேயரின் வலிமை சூப்பர் மேனின் வலிமையை விஞ்சக்கூடியது. அதேபோல், அர்ஜுனனின் வீரம், அயர்ன் மேனின் வீரத்தைவிட சிறந்தது. நாம் நமது குழந்தைகளையும், இளைஞர்களையும் மேற்கத்திய சூப்பர் ஹீரோ கதைகளுக்குள் முடக்கிவிடாமல், அவர்களுக்கு இந்தியாவின் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அறிவை புகட்ட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூகமும் இதற்கு முன்வர வேண்டும்.

ஸ்பைடர் மேன், பேட் மேன் அல்லது சூப்பர் மேன் கதாபாத்திரங்களை விட இந்தியாவின் புராண நாயகர்கள் மிகச் சிறந்த வலிமை, லட்சியங்களைக் கொண்டுள்ளனர். ராமர் நீதியின் இறுதி சின்னமாகத் திகழ்கிறார். ராம ராஜ்ஜியம் சிறந்த நல்லாட்சிக்கு உதாரணமாக விளங்குகிறது. ராமர், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரின் பெருமைகள் குறித்தும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கிடைக்கும் பாடங்கள் குறித்தும் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

இந்த இதிகாசங்கள், அவதார் போன்ற பிரபலமான திரைப்படங்களை விடவும் ஆழமானவை. பகாசுரன், கம்சன் போன்ற கதாபாத்திரங்களின் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறபாட்டைக் கற்பிக்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்த 4-5 கோடி மக்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளனர். இன்று நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள இந்தியர்களிடையே தனிநபர் வருமானம் மிகவும் அதிகமாக உள்ளது. மோகன் பகவத் எப்போதும் கூறுவதுபோல நாட்டின் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்வது சிறந்தது.

பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம், உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.