புஷ்பா 2: கூட்ட நெரிசல் பலி: `அல்லு அர்ஜூனும் காரணம்' – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை!

கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா:2 தி ரூல். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதாவது 2024 டிசம்பர் 4 அன்று, ஹைதராபாத்தில் உள்ள RTC X சாலைகளில் உள்ள சந்தியா திரையரங்கில், சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருவதாக ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்ட நெரிசலில் 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மைனர் மகனான ஸ்ரீதேஜுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளானார்.

நடிகர் அல்லு அர்ஜுன்

இந்தத் துயரம் பெரும் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாகவே ஏற்பட்டது என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

நடிகர் அல்லு அர்ஜூன் வருவார் என்று தெரிந்திருந்தும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக சந்தியா திரையரங்கின் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் மீதும், அதிக கூட்டம் இருந்தும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தது, உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது, பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக நடிகரின் வருகைக்குக் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டும் நிகழ்ச்சிக்கு வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 22 பேர் மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் உள்ள 9வது கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ACJM) முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 24 நபர்கள் பட்டியலில், அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட மேலாளர், அவரது ஊழியர்கள் மற்றும் எட்டு தனியார் பவுன்சர்களும் அடங்குவர். இவர்களது செயல்களே சூழலை மேலும் மோசமாக்கியதாகக் கூறப்படுகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்

திரையரங்கு உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304-A (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிற பிரிவுகளின் கீழ், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அல்லு அர்ஜுன், விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு விசாரணை அடுத்தக் கட்டத்திற்கு மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், காயமடைந்தவரின் தொடர்ச்சியான மருத்துவத் தேவைகளுக்காகப் அதிக இழப்பீட்டை கோரிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.