மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.

இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்தார். ஆனால் அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று அக்கும்பல் தெரிவித்தது.

அதன்படி ஆன்லைன் கோர்ட்டில் அக்கும்பல் மும்பை பெண்ணிடம் விசாரணை நடத்தியது. நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் அப்பெண் தனக்கு பணமோசடியில் தொடர்பு கிடையாது என்று தெரிவித்தார்.

பணமோசடி
பணமோசடி

இதையடுத்து ஆய்வுக்காக உங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்கும்படி நீதிபதியாக இருந்தவர் கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் தனது சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்தச் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்றும், ஆய்வு செய்து முடித்த பிறகு சொத்துகள் திரும்பக் கொடுக்கப்படும் என்றும் கூறி அப்பெண்ணிடம் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அப்பெண்ணும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.3.75 கோடியை அனுப்பி வைத்தார்.

ஆனால் சொன்னபடி அவர்கள் அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. பல மாதங்கள் காத்திருந்த பிறகு அப்பெண் இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் மங்கேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரைக் கைது செய்தனர்.

அவரது வங்கிக் கணக்கிற்கு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.7 கோடி சென்று இருந்தது. இதே போன்று மும்பை மேற்கு புறநகர் பகுதி ஆசிரியை ஒருவரை 90 நாட்கள் டிஜிட்டலில் கைது செய்து ரூ. 20 லட்சத்தைப் பறித்தது தொடர்பாக காந்திநகரைச் சேர்ந்த கெளரவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் தனது வங்கிக் கணக்கிற்கு வந்த பணத்தை எடுத்து கொடுக்க ரூ.10 ஆயிரம் கமிஷன் பெற்று இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மூதாட்டியை டிஜிட்டலில் கைது செய்து ரூ. 1.1 கோடி பறிப்பு

மும்பை மரைன் டிரைவ் பகுதியைச் சேர்ந்த 86 வயது மூதாட்டிக்குக் கடந்த டிசம்பர் 4ம் தேதி போலீஸ் சீருடையில் இருந்த ஒரு பெண், தன்னை காவல்துறையைச் சேர்ந்த ‘கவிதா’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த மூதாட்டிக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்தார்.

மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஒரு டெபிட் கார்டு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். போலீஸ் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்தவர்கள் மூதாட்டியை நேரடியாக கைது செய்ய வேண்டியிருக்கும் என்று மிரட்டினர்.

Digital Arrest
Digital Arrest

அதோடு ரகசியக் கடிதம் ஒன்றில் மூதாட்டியைக் கையெழுத்திட வைத்து அவரிடம் இருக்கும் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கூறினர்.

இதற்காக சுப்ரீம் கோர்ட் கைது வாரண்டையும் அப்பெண்ணிடம் காட்டினர். சரிபார்த்த பிறகு அவரிடம் பணம் திரும்பக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த மூதாட்டி ஒரே பரிவர்த்தனையில் ரூ. 1.1 கோடியை பிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றினார். இதற்காக மர்ம நபர் ரசீது ஒன்றையும் கொடுத்து இருந்தார்.

சொன்னபடி பணம் வராததால் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பணம் சென்ற பி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிர்வாகியைக் கைது செய்தனர்.

அவரது பெயர் சங்க்ராம் பாலிராம் என்று தெரிய வந்தது. மோசடி பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யச் சொல்லி மாட்டிக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.