Puducherry Cricket Scam: ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரின் கனவும் ஏதோ ஒரு நாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளே இந்த கனவுக்கான நுழைவு வாயில். ஆனால், புதுச்சேரியில் திறமைக்கு பதிலாக ‘பணம் மற்றும் போலி ஆவணங்கள்’ மூலமாக வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் அம்மாநில அணிக்கு தேர்வு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Add Zee News as a Preferred Source
ஐபிஎல் கனவும் குறுக்கு வழியும்
இந்திய கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பை என்பது தேசிய அணிக்குச் செல்வதற்கான பாதை மட்டுமல்ல, அது ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களுக்குச் செல்வதற்கான ஒரு எளிய வழியாகும். ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், அந்தந்த மாநில அணிகளில் இடம்பிடித்து, சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதற்காக மாநில அணிகளில் இடம்பிடிக்க பிளேயர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், புதுச்சேரியில் சில பயிற்சியாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வீரர்களுக்கு ரஞ்சி கோப்பையில் விளையாட ‘குறுக்கு வழி’ அமைத்துக் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போலி ஆவணங்கள்
பிசிசிஐ விதிகளின்படி, ஒரு வீரர் ஒரு மாநில அணிக்காக விளையாட வேண்டுமென்றால், அவர் அங்கு குறைந்தது ஒரு வருடம் வசித்திருக்க வேண்டும் (Residency Rule). இந்த விதியை உடைக்க, சில தனியார் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு போலியான இருப்பிடச் சான்றிதழ்கள், முன் தேதியிட்ட (Backdated) கல்லூரிச் சேர்க்கைகள், திருத்தப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டுகள், போலியான வேலை வாய்ப்பு ஆவணங்கள் செய்து கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிமாநில வீரர்கள், புதுச்சேரியிலேயே தங்கிப் படிப்பது போலவும், வேலை பார்ப்பது போலவும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, ‘உள்ளூர் வீரர்’ என்ற போர்வையில் களமிறக்கப்படுகிறார்கள்.
ஒரு ‘உள்ளூர்’ வீரர் கூட இல்லை
2025-26 ரஞ்சி கோப்பை சீசனின் முதல் பாதியில், புதுச்சேரி அணி சார்பில் களமிறங்கிய வீரர்களில் ஒருவர்கூட அங்கு பிறந்து வளர்ந்த உண்மையான ‘உள்ளூர்’ வீரர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018-ல் பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, வெளிமாநில வீரர்களை உள்ளூர் வீரர்களாகச் சித்தரிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. “பணம் கொடுக்க முடிந்தவர்கள் மைதானத்திற்கு வந்து பயிற்சியாளர்களுடன் டீல் பேசுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்களை இங்கு அழைத்து வருகிறார்கள்,” என முன்னாள் வீரர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கிரிக்கெட் நிர்வாகத்தின் பதில் என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ஒருவர், “அரசு வழங்கும் ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களைச் சரிபார்க்கும் அதிகாரம் சங்கத்திற்கு இல்லை. நாங்கள் பிசிசிஐ விதிகளையே பின்பற்றுகிறோம். புதுச்சேரியில் உள்ளூர் வீரர்களிடம் போதிய தரம் இல்லை, அதனால் சிறப்பாக விளையாடும் வீரர்களையே நாங்கள் தேர்வு செய்கிறோம்” என கூறியுள்ளார்.
தீர்வு என்ன?
புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி வைத்திருப்பவர் ஒருவர் கூறுகையில், இந்த ஒரு வருட வசிப்பிட விதியே முறைகேடுகளுக்குக் காரணம் என்கிறார். விதர்பா கிரிக்கெட் சங்கம் பின்பற்றுவதைப் போல, மூன்று ஆண்டுகள் கல்வி அல்லது விளையாட்டுப் பின்னணி இருந்தால் மட்டுமே ஒருவரை உள்ளூர் வீரராகக் கருத வேண்டும் என்ற விதியை பிசிசிஐ கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க | தொடர்ந்து சொதப்பும் CSK-வின் முக்கிய வீரர்.. இப்படி ஆடினா எப்படி? முழு விவரம்!
மேலும் படிக்க | பவுலிங்கில் செஞ்சூரி அடித்த சிஎஸ்கே இளம் வீரர்! எதிரணிக்கு கொண்டாட்டம்
மேலும் படிக்க | SA20ல் கலக்கும் CSK வீரர்.. 22 ரன், 1 விக்கெட்.. ஜடேஜாவுக்கு மாற்று இவர்தான் – முழு விவரம்!
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More