"என்னோடு நின்ற தம்பி இளமகிழன்" – உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?

“வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்” என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள்.

நலத்திட்ட விழா

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான அய்யப்பன் அதிமுக எம்.எல்.ஏ-வாக உள்ளார். திமுகவுக்கு நீண்டகாலமாக சவாலாக இருக்கும் இத்தொகுதியில் பெரும்பாலான தேர்தல்களில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்து திமுக போட்டியிட்டாலும், திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டாலும் வெற்றி எட்டாக்கனியாகவே உள்ளது.

அதே நேரம், அதிமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கூட்டணி வைத்தால் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது.

நலத்திட்ட விழாவில் கனிமொழி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பார்வர்ட் பிளாக் தலைவர் பி.வி.கதிரவன் அதிமுக வேட்பாளர் அய்யப்பனிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். அதேநேரம் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் வந்த மகேந்திரனும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதால் அவரும் போட்டியிட விரும்புகிறார்.

இது ஒருபக்கமென்றால், இந்த முறை எப்படியும் உசிலம்பட்டியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டலில் திமுகவினர் சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் தொகுதியை குறிவைத்து திமுக புள்ளிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் கனிமொழியின் தீவிர ஆதரவாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இளமகிழன் தொடர்ந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உட்கட்சியினரின் உள்ளடியால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் துவண்டு விடாமல் ஒரு நாள் விடாமல் தொகுதியில் கட்சி சார்பில் ஏதாவதொரு நலத்திட்ட விழாவை நடத்தி வருகிறார்.

கனிமொழி – இளமகிழன்

இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் இளமகிழன். அமைச்சர் பி.மூர்த்தி, தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி, மதுரை தெற்கு மாவட்டச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசும்போதுதான், “வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன் என்பதை இந்த மேடையிலே நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு பேச கூட்டம் ஆர்ப்பரித்தது. இளமகிழன் மகிழ்ச்சி அடைய, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஆச்சரியப்பட்டார்கள்.

திமுக-வில் கனிமொழிக்கு என ஆதரவாளர்கள் குறைவு, அது மட்டுமின்றி அவர் ஆதரவைப் பெறும் திமுக நிர்வாகிகளும் அரிதானவர்கள். அதேநேரம் தேர்தல் நேரத்தில் தலைமையிடம் அவர் பரிந்துரைக்கும் ஒருசில நபர்களுக்கு சீட் கிடைத்துவிடும் என்பதால், உசிலம்பட்டி கூட்டத்தில் இளமகிழனை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பேசியதன் மூலம் உசிலம்பட்டிக்கான திமுக வேட்பாளரை அடையாளம் காட்டி விட்டார் என்று திமுக-வினர் பேசி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.