டாக்கா,
வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திபு சந்திர தாஸ் என்பவர் அங்கு அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அம்ரித் மொண்டல் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்துக்கள் மீதான தாக்குலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இவை பாகுபாடு, மதரீதியான தாக்குதல் அல்ல என்றும் அனைத்தும் முன்விரோதத்தால் நடப்பவை என முகமது யூனுஸ் அரசாங்கம் மழுப்பி வருகிறது. இதற்கிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் மசூத் துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று இந்து மதத்தை சேர்ந்த மற்றொருவர் மீது வங்காளதேசத்தில் தாக்குதல் நடந்தது. வங்காளதேசத்தின் ஷரிதாப்பூர் மாகாணம் தமுத்யாவை சேர்ந்தவர் கோகோன் சந்திர தாஸ் (வயது 50). திருமணமாகி மனைவி சீமாவுடன் வசித்து வரும் அவர் கீர்பாங்கா பஜாரில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கோகோன் சந்திர தாசை கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் சரமாரி தாக்குதல் நடத்தினர். பின்னர் பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருடைய உடல்நிலை மோசமான காரணத்தால் டாக்கா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வங்காளதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.