இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் இந்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ்களில் ஒன்றாக திரைக்கு வரவிருந்தது.
கருணாஸ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், கடைசி நேரத்தில் படத்திற்கு வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதால் திரையரங்க வெளியீட்டை தவிர்த்துவிட்டு, படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறார்கள்.

குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது குறித்து காட்டமாக செய்தியாளர்களிடம் பேசியிருந்தார் சுரேஷ் காமாட்சி.
இதற்கு பின்னாலுள்ள பிரச்னையென்ன என்பதை கேட்டறிவதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத் தொடர்பு கொண்டோம்.
சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், “இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை.
திரையரங்கு உரிமையாளர்கள் ‘படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க.
ஆனா, அவங்க எங்களுக்கு தியேட்டரே கொடுக்கமாட்டேங்குறாங்க. அப்புறம் நான் எங்கதான் என்னுடைய படத்தை வியாபாரம் செய்வது.

ஒரு படம் ஓடும், ஓடலைங்கிறதை வாய்ப்புக் கொடுத்த பிறகுதான் முடிவு பண்ணனும். அப்படி அந்தப் படத்தை எடுத்து ஓட்டுறதுக்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா, தியேட்டர்களை வாடகைக்குக் கொடுங்க.
அதுவும் கொடுக்கமாட்டேங்குறாங்க.” என்றவரிடம், ” ஏன், ‘சல்லியர்கள்’ படத்திற்கு இத்தனை குறைவான திரைகள்?
இதற்கு பின்னால் வேறெதும் நோக்கங்கள் இருக்கிறதா?” எனக் கேட்டதற்கு பதில் தந்தவர், “அப்படி ஆதாரம் இல்லாம சொல்லிட முடியாது. ஆனா, 27 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தது அராஜகம்!
பி.வி.ஆர் சின்ன படங்களுக்கு இதைதான் தொடர்ந்து செய்றாங்க போல. அவங்க சின்ன திரைப்படங்களை திரையிடுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறாங்களாம்.
இப்படியான பிரச்னைகள்ல தயாரிப்பாளர் சங்கம் எப்படியான ஈடுபாடும் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல தனஞ்செயன் கணக்கு புள்ள வேலை பார்த்துட்டிருக்கார். உறுப்பினர் சேர்க்கையில்தான் அவர் கவனமாக இருக்காரு.

நானும் அந்த சங்கத்துல பொறுப்புல இருந்தேன். மாற்றம் ஏதும் வரலைனுதான் அங்கிருந்து வெளில வந்துட்டேன்.
ரெண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில இருக்கிற ஈகோனால சில விஷயங்கள் நடப்பதாக வெளில பேசுவதும் உண்மைதான். சின்ன சின்ன அமைப்புகள்கூட, அவங்க நினைச்சதை வெற்றிகரமாக செய்துவிட்டு போயிடுறாங்க. அதை நம்மால செய்ய முடியலேயே!
இந்தப் பிரச்னைக்குப் பிறகு எனக்கு சிலர் ஆதரவாக அறிக்கைகள் அனுப்புறாங்க. இது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் சொல்லியிருக்காங்க.” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “‘வணங்கான்’ திரைப்பட வெளியீட்டின் சமயத்திலும் இதே பஞ்சாயத்துதான் நடந்தது.
விநியோகஸ்தர் அமைப்பு கட்டப்பஞ்சாயத்து வேலைதான் பார்த்துட்டிருக்காங்க. படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாடி சொல்லலாம். லாஸ்ட் மினிட்ல இது மாதிரிதான் பிரச்னை பண்றாங்க.” எனச் சொன்னவரிடம்,”‘வணங்கான்’, ‘சல்லியர்கள்’ என சுரேஷ் காமாட்சிக்கும் மட்டும் இப்படியான பிரச்னைகள் தொடர்ந்து நடப்பதேன்?” எனக் கேட்டோம்.
பதில் கொடுத்தவர், “இதுக்கு என்ன சொல்றதுனு தெரில! நீங்க எதுனாலும் செய்து பாருங்க, நான் வென்று வருவேன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

தயாரிப்பாளர் சங்கம் எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்க. தயாரிப்பாளர் சங்கம், தேர்தல் நேரத்துல மட்டும் பணம் எடுத்துட்டு வருவாங்க.
தேர்தல் முடிஞ்சதுக்குப் பிறகு அவர்களை இங்கு பார்க்கவே முடியாது. நான் இருக்கிற களத்துல, தமிழ் தேசியத்துக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்யணும்னு விரும்பினேன்.
அதுக்காகதான் இந்தப் படத்தை நான் வெளியிடணும்னு திட்டமிட்டேன்.” எனப் பேசி முடித்தார்.