அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.
செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி சாய்த்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், போராடும் ஆசிரியர்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள் என அக்கறைக் காட்டுகிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

எல்லா அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த ஊழியர்களின் போராட்டத்தைச் செவிமடுக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்.
சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை அள்ளும் பணிகளைத் தனியாருக்கு ஒதுக்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிப்பன் பில்டிங் முன்பு அமர்ந்து போராடத் தொடங்கினர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தது. அதன்பிறகும் தூய்மைப் பணியாளர்கள் பின்வாங்கவில்லை. சென்னை மாநகர் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.
அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டுவிட்டனர். மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தையும் முற்றுகையிட்டனர். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அம்பத்தூரில் 50 நாட்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு சுழற்சி முறையில் நான்கு பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். உச்சக்கட்டமாக இன்று சுடுகாட்டில் குடியேறி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர்.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் காவல்துறை, பேருந்தில் அடைத்து பல மணி நேரம் ஊரைச் சுற்றி எங்காவது ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் அடைக்கிறார்கள்.
மாலைக்கு மேல் விடுவிக்கிறார்கள். மறுநாள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். எந்த இடத்தில் எந்த நேரத்தில் அமர்ந்து போராடுவார்கள் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் காவல்துறையினர்.
நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வீரியமாகிக்கொண்டே போகிறது. சென்னை மாநகருக்குள் இப்படியொரு போராட்டம் 150 நாட்களுக்கு மேல் நடந்தும் துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் வாய் மூடி மௌனியாகவே நிற்கிறார் என நொந்துபோய் சொல்கின்றனர் போராடுபவர்களின் பிரதிநிதிகள்.

ரிப்பன் பில்டிங் முன்பு 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடியிருந்தனர். அப்போது 7-8 சுற்று பேச்சுவார்த்தை நடந்திருந்தன. எல்லாவற்றிலும் துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர் பாபுதான் தலைமை. அவரின் தடாலடியான பேச்சால் எகிறும் தொனியாலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.
ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட அந்தக் கடைசி நாளில்தான் அமைச்சர் நேரு பேச்சுவார்த்தைக்கே வந்தார். அப்போதும் ‘கோர்ட் உத்தரவு போட்டிருச்சு கலைஞ்சு போய்டுங்க…’ என அமைச்சர் சேகர்பாபு கையை விரிக்க, நேரு வாயையே திறக்கவில்லை என்கின்றனர் அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிலர்.
ரிப்பன் பில்டிங் கைதின் போது எழுந்த விமர்சனங்களால் அமைச்சர் சேகர் பாபு இப்போதெல்லாம் போராட்டத்தின் பக்கம் வெளிப்படையாகத் தலையிடுவதில்லை. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது சம்பந்தமான கேள்விகளின்போது, ‘காது கேட்காது…’ என எஸ்கேப் ஆகத்தான் செய்தார்.
அவருக்கும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவருக்குக் கையை விரிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவும் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரச்னை என்கின்றனர் போராடுகிறவர்கள்.

சென்னையின் துணை மேயர் மகேஷ் குமார் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியை, மகேஷ்குமார் அமைச்சர் நேருவின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருக்கிறார்.
நம்பிக்கையோடு கோரிக்கை மனுவைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போராடும் தூய்மைப் பணியாளர்கள். ஆனால், இவர்களைச் சந்திக்க வெறும் இரண்டே இரண்டு நிமிடங்களை மட்டுமே செலவழித்திருக்கிறார் அமைச்சர் நேரு.
‘துணை முதல்வரைச் சந்திக்க அவசரமா போறேன். 21 ஆம் தேதிக்கு மேல என்னனு பார்க்குறேன்’ என்றவர் கோரிக்கை மனுவை வாங்கிக் கொள்வதைப் போல ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு அனுப்பிவிட்டிருக்கிறார்.
துணை முதல்வருக்குக் கோரிக்கை வைத்து இன்னொரு காப்பி கொடுங்க எனக் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார் மகேஷ் குமார். 21 ஆம் தேதிக்கு மேல் நேருவிடமிருந்தும் அழைப்பில்லை. துணை முதல்வருக்குக் கொடுத்த மனுவுக்கும் பதிலில்லை. பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன் என வந்த மகேஷ் குமாரும் அதன்பிறகு லைனுக்கே வராமல் கமுக்கமாகிவிட்டதில் குழம்பிப் போய் நிற்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

அதிகாரிகளும் தங்களின் பிரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்கின்றனர் போராட்டக்காரர்கள். மாநகராட்சி ஆணையரின் வீட்டையே முற்றுகையிட்டுவிட்ட போதும் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் கார்த்திகேயனும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்காமல் வெறுமனே மனுவை மட்டும் சம்பிரதாயத்துக்கு வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார் என்கின்றனர் உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள்.
தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்கில் போராட்டத்தைத் தொடங்கிய சமயத்திலேயே அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே பாலமாகச் செயல்படத் தொடங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
வெளியே காட்டிக்கொள்ளாமல் ஆப் தி ரெக்கார்டாக இருதரப்புக்கும் பாலமாகச் செயல்பட்டவர், சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதையும் போட்டுடைத்தார்.
தூய்மைப் பணியாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லையே என ஒரு பத்திரிகையாளர் கேட்க, “பேச்சுவார்த்தை நடத்தலன்னு உங்களுக்குத் தெரியுமா, நாங்கெல்லாம் பேசிக்கிட்டுதான் இருக்கோம்” எனக் கொதித்தார் சண்முகம்.
டிசம்பர் 30 ஆம் தேதி இரவு மீண்டும் ரிப்பன் பில்டிங்கின் வெளியே அமர்ந்து போராட முயன்றனர் தூய்மைப் பணியாளர்கள். அவர்களைக் கைது செய்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர். கண்ணப்பர் திடலில் அவர்களைச் சந்திக்க செல்வப்பெருந்தகை வந்தார். “நான் போய் சி.எம்-கிட்ட பேசுறேன். உங்க கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி டெல்லியில இருந்தே அறிக்கை விட சொல்றேன்” என நம்பிக்கையாகப் பேசிச் சென்றிருக்கிறார்.

இவ்வளவு நடந்தும் ஆகஸ்ட் 1 க்குப் பிறகு துறைசார்ந்த அமைச்சர் கே.என்.நேரு இன்னும் ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைக்கூட தூய்மைப் பணியாளர்களோடு நடத்தவில்லை.
இதுசம்பந்தமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியிடம் பேசினோம்.
“நாங்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் போராடவில்லை. எங்கள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடுகிறோம். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அமைச்சர் தரப்போ அதிகாரிகள் தரப்போ இன்னும் எங்களுடன் உட்கார்ந்து பேசவில்லை. பேசாத வரைக்கும் இந்தப் போராட்டம் வீரியமாகத் தொடரவே செய்யும்” என்றார் உறுதியாக.