திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" – சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,

“திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ வராதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் எனத் தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.

இந்தி எதிர்ப்புக்காகப் போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம்தான். திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பேசுகிறார்.

பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில், பெருமைப்பட ஒன்றுமில்லை. போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள்.

seeman
seeman

மதுவுக்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்குக் கொடுப்பதில்லை. எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையிலும், ‘நாங்கள் நல்ல ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறோம்’ எனக் கூறி வருகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு இடையேதான் போட்டி என்கிறார்கள். யார் அதிகமாக நாட்டை நாசப்படுத்துவது என்பதில்தான் போட்டி.

தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுவதற்குக் காரணம் அவர்களேதான். அவர்கள்தான் இந்த ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்த அரசு அமையாமல் தடுத்திருக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.