மும்பை: வாட்ஸ்ஆப்பிற்கு வந்த இ-செல்லான்; திறந்து பார்த்த தொழிலதிபரிடம் ரூ.21 லட்சம் திருடிய மாணவர்

இணையத்தளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை.

ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி, டிஜிட்டல் கைது, பணமோசடி என்று கூறி மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல வழிகளில் இந்த ஆன்லைன் குற்றங்கள் நடக்கின்றன. மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் டிராபிக் போலீஸாரின் இ-செல்லான் ஒன்று வந்தது. தொழிலதிபர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க குஜராத்திற்குச் சென்று இருந்த நேரத்தில் இந்த மெசேஜ் வந்தது.

திருமண வேலையில் அவர் பிஸியாக இருந்தபோது இந்த மெசேஜ் வந்தது. இதனால் அவர் அந்த மெசேஜைப் பதிவிறக்கம் செய்தார். ஆனால் அந்த மெசேஜ் இணையதள மோசடி கும்பல் அனுப்பியது ஆகும். இது தொழிலதிபருக்குத் தெரியாது.

ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே
ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே

மெசேஜைத் திறந்த சிறிது நேரத்தில் தொழிலதிபரின் மொபைல் போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.33 லட்சம் மற்றும் 10.39 லட்சம் பணத்தை சைபர் கும்பல் அபகரித்துவிட்டது.

ஏதோ விபரீதம் நடந்து இருப்பதை உணர்ந்த தொழிலதிபர் உடனே மறுநாள் தனது வங்கிக்குச் சென்று இது குறித்து விசாரித்த போது இருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது. இது இணைய மோசடியாக இருக்கும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் தொழிலதிபர் புகார் செய்தார். போலீஸார் விரைந்து விசாரித்தனர். இதில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே என்பவர் வங்கிக் கணக்கிற்கு ரூ.8.5 லட்சம் சென்று இருந்தது தெரிய வந்தது.

உடனே அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த மோசடியில் பல அடுக்கு மோசடி கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு கும்பல் திட்டமிட்டு பல அடுக்காகப் பிரிந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.