Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் – மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!

எக்ஸ் தளத்தின் ‘கிரோக்’ ஏ.ஐ சாட்பாட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

என்ன பிரச்னை?

ஏ.ஐ சாட்பாட்களில் குறிப்பாக கிரோக்கில் (Grok) பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை ஆபாசமாக உருவாக்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படி உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் பதிவிடப்படுகின்றன.

இது இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏ.ஐ உருவாக்கிய பெண்களின் புகைப்படங்களைத் தாண்டி, நிஜப் பெண்களையும் இப்படி சித்தரிக்கிறார்கள்.

மிக எளிய பிராம்ப்டுகளில், பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக எளிமையாகச் சித்தரிக்கப்படுகிறது. இதில் பெண்களில் ஆடைகளைக் கூட மாற்ற முடிகிறது என்பது கூடுதல் சிக்கல்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

இது பெண்களின் ஆன்லைன் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதோடு, அவர்களது தனிப்பட்ட உரிமையையும் பாதிக்கிறது.

இந்த ஆபாச சித்தரிப்பு கிரோக் தளத்தில் மிக அதிகமாகவும், எளிமையாக நடக்கிறது.

இந்தப் பிரச்னையை மகாராஷ்டிராவின் மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நேற்று எடுத்துச் சென்றிருந்தார்.

மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கை

இதையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் படி…

“கிரோக்கின் ஆபாச படங்கள் உருவாக்கம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 ஆகியவைகளுக்குக் கீழ் சட்டத்திற்கு புறம்பானது.

இந்த உருவாக்கம் ஆபாசப் படங்களை ஊக்குவிக்கிறது… குழந்தைகளின் பாதுகாப்பைப் பாதிக்கிறது… பெண்களைக் கண்ணியமின்றி சித்தரிக்கிறது… இது ஒரு சைபர் குற்றம்.

அதனால், கிரோக் நிறுவனம் உடனடியாக ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் மாற்றுவதை நிறுத்த வேண்டும்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அனைத்து ஆபாச கன்டென்டுகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கான அறிக்கையை அடுத்த 72 மணிநேரத்திற்குள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதை மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ், எக்ஸ் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்கலாம்.

அடுத்ததாக, எக்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தக் குற்றங்களைச் செய்த பயனாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.