வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்கியதை கண்டித்து, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கோரிக்கை விடுத்துள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன என்று கூறியுள்ள நஸ்ருல், இந்திய – வங்கதேச கிரிக்கெட் உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 2026 ஐபிஎல் ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான், BCCI-யின் உத்தரவின் பேரில் தற்போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source

அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பு
“ஐபிஎல் ஒழுங்குமுறை அமைப்பான BCCI/IPL, முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரையின்படி, சரியான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளை தொடர்ந்து இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கேகேஆர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தில் இருந்து, இந்துக்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறி, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் விளையாடுவதை பாஜக உள்ளிட்ட மத அமைப்புகள் எதிர்த்தன. உஜ்ஜைன் போன்ற பகுதிகளில் வங்கதேச வீரர்களுடன் போட்டிகளை சீர்குலைக்க மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் BCCI, கேகேஆர் அணியிடம் முஸ்தாபிசுரை விடுவிக்க கோரியது.
நஸ்ருலின் கடும் எதிர்வினை
“தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்துமாறு கோரியுள்ளேன். வங்கதேசம், அதன் கிரிக்கெட் அல்லது வீரர்களை அவமதிப்பதை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. BCCI தீவிரவாத வகுப்புவாத குழுக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளது” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் நஸ்ருல் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகராக, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் முழு விவகாரத்தையும் ஆவணப்படுத்தி ICCயிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக நஸ்ருல் தெரிவித்தார். “ஒரு வங்கதேச வீரர் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தும் இந்தியாவில் விளையாட முடியாவிட்டால், தேசிய அணி இந்தியாவில் உலக கோப்பைக்கு பாதுகாப்பாக பயணிக்க முடியாது. பிப்ரவரி T20 உலக கோப்பை 2026க்கான வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற கேட்டுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா, மும்பையில் போட்டிகள்
ஏற்கனவே வெளியான அட்டவணைப்படி, வங்கதேசம் டி20 உலக கோப்பையின் முதல் சுற்றில் கொல்கத்தாவில் மூன்று போட்டிகளும், மும்பையில் ஒரு போட்டியிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வங்கதேச வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலை நஸ்ருல் வெளிப்படுத்தியுள்ளார். முஸ்தாபிசுர் ரஹ்மானின் நீக்கம், இந்தியா-வங்கதேச கிரிக்கெட் உறவுகளை மோசமாக்குவதாக சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிலர், இனி இந்தியா-வங்கதேச தொடர் நடக்கும் என நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விளையாட்டு அரசியலாக மாறி, இரு நாடுகளின் கிரிக்கெட் உறவுகளை பாதிக்கும் அபாயத்தில் உள்ளது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
About the Author
RK Spark