Rajasthan Royals Captain In Ipl 2026: ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்சி பதவி யாருக்கு செல்லும் என்பது குறித்து கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சஞ்சு சாம்சனுக்கு பிறகு அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்விக்கு பதிலாக, சென்னையில் இருந்து சென்றுள்ள ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜடேஜாவின் புகைப்படத்துடன் தளபதி என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இது ரசிகர்களிடையே மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பதிவு ஜடேஜா ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்கலாம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
Thalapathy pic.twitter.com/xPPX5z3Sco
— Rajasthan Royals (@rajasthanroyals) January 4, 2026
டிரேடு செய்யப்பட்ட ஜடேஜா
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் டிரேடு மூலம் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பினர். ஜடேஜா ரூ.18 கோடியிலிருந்து ரூ.14 கோடியாக தனது சம்பளத்தை குறைத்து கொண்டு ராஜஸ்தான் அணிக்கு சென்றார். 2008 மற்றும் 2009ல் ஷேன் வார்னின் கீழ் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஜடேஜா, 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு திரும்பி உள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின்படி, டிரேடு செய்யப்படுவதற்கு முன்பே ஜடேஜா ராஜஸ்தான் நிர்வாகத்திடம் கேப்டன்சி பொறுப்பை கேட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஜடேஜா, கேப்டன்சி பொறுப்புடன் ஓய்வை பெற விரும்பியதாகவும், அதனால் தான் சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

வேறு கேப்டன்கள் யார் யார்?
ஜடேஜாவை தாண்டி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ராஜஸ்தான் அணியில் கேப்டன்சி பொறுப்பை ஏற்க தகுதியானவர்கள். கடந்த சீசனில் சாம்சன் இல்லாத நேரத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார். இவர்களை தாண்டி விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலும் கேப்டன்சி வேட்பாளராக கருதப்படுகிறார். இருப்பினும், சர்வதேச அனுபவம் கொண்ட ஜடேஜா கேப்டன்சி பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஐபிஎல்லில் எம்.எஸ்.தோனி ஜடேஜாவிடம் சிஎஸ்கே கேப்டன்சியை ஒப்படைத்தார், ஆனால் அந்த முயற்சி எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஜடேஜா கேப்டன்சியில் முதல் எட்டு போட்டிகளில் 6ல் தோல்வியடைந்ததால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஜடேஜாவின் தனிப்பட்ட ஃபார்ம் பாதிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.
புனே மைதானம்!
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் ஐபிஎல் 2026ல் ராஜஸ்தான் ராயல்ஸின் சில போட்டிகளை நடத்த உள்ளது. ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்திலிருந்து இந்த புதிய மைதானத்திற்கு போட்டிகளை மாற்ற உள்ளனர். ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷனுடன் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் RR அணி தங்கள் மற்றொரு ஹோம் மைதானமான குவாஹாத்தியில் உள்ள பர்சாபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தையும் தொடர்ந்து பயன்படுத்தும். ஜடேஜாவின் கேப்டன்சி நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark