DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா… தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின் கூட்டணி சலசலப்பும், சமூக ஊடகங்களில் பரவும் புரோமோஷன் வீடியோக்களும் என மக்கள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டனர்.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போதே குஜராத் மாடலுக்கு மாற்றாக திராவிட மாடல் அரசு என அறிவித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து விடியல் பயணம், கொரோனா நிவாரணம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உதவித் தொகை, தமிழ்ப்புதல்வன் எனத் திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டது.

இதில், மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் போன்ற சில திட்டங்களில் ஏற்பட்ட குளறுபடிகள், போதாமைகள் காரணமாக விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொண்டது. இதற்கிடையில்தான், த.வெ.க கட்சி தொடக்கம், காங்கிரஸ் – திமுக கூட்டணி பூசல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் சதுரங்க ஆட்டமும் தொடங்கியது.

இந்த தேர்தல் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் ஒரு காய்தான் கடந்த ஒரு மாதமாக தி.மு.க அரசு செய்துவரும் ‘திடீர்’ அறிவிப்பும், அன்பளிப்பும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற்றாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பிப்ரவரி 2026-க்குள் கொடுத்து முடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுடன் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் மடிக்கணினி திட்டம், கிக் தொழிலாளர்களுக்கு ரூ.20,000 மானியம், தேர்தலுக்கு முன்பு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு அட்டை, மார்ச் 2026-க்குள் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டி ஒப்படைத்துவிட வேண்டும் என்ற கலைஞர் கனவு இல்லம் திட்டம், 75,000 அரசுப் பணி இடங்களை நிரப்பும் துரித நடவடிக்கை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான முதல் தவணை விண்ணப்பத்திலிருந்து நீக்கப்பட்ட 15 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குதல் என கடந்த 4 ஆண்டை விட கடந்த சில மாதங்களாக அரசு நிர்வாகம் சுறுசுறுப்புடன் தீவிரமாக இயங்குகிறது.

டெலிவரி ஊழியர்கள்
டெலிவரி ஊழியர்கள் | கிக் தொழிலாளர்கள்

அதில் தற்போது பேசுபொருளாகியிருப்பதுதான் ‘பொங்கல் ரொக்கப் பரிசு’. ‘கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு கொடுக்கவே இல்லை. இந்த ஆண்டு ரூ.3000 வழங்குகிறது. இது தேர்தல் நேரத்தில் தி.மு.க-வின் வழக்கமான ஸ்டண்ட். சரியாக ஆட்சி செய்யாத தி.மு.க இப்போது இதுபோன்ற திட்டங்களால் மக்களை ஏமாற்ற நினைக்கிறது. தி.மு.க-வுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் சரிந்திருந்தது. அதனால் தி.மு.க நடுங்கிக்கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

`தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 அறிவித்துள்ளது திமுக அரசு’ – அன்புமணி

உண்மையிலேயே தி.மு.க-வுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதா? என்றக் கேள்வியுடன் ஊடகவியலாளர் லக்ஷ்மணனிடம் பேசினோம். “இது தி.மு.க மட்டுமில்ல வழக்கமா எல்லாக் கட்சிக் காரங்களும் செய்றதுதான்.” எனப் பேசத் தொடங்கினார்.

“பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 தவிர மீதமிருக்கும் திட்டங்கள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருப்பதுதானே. ஆனால் இதை இந்தச் சூழலில் நிறைவேற்றுவதால், இது தேர்தலை மையப்படுத்திதான் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை ஒரு வருடத்துக்கு முன்பே தொடங்கி, ஆறு மாதத்துக்கு முன்பே நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் மக்கள் அதை மறந்துவிடுவார்கள் எனத் தி.மு.க நினைத்திருக்கலாம்.

மோடி - அமித் ஷா
மோடி – அமித் ஷா

தமிழ்நாடு அரசுக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள், மக்களுக்கு வழங்கும் சலுகைகள், திட்டங்களை முடிந்தவரை தடுக்கவே விரும்பும். அது அவர்களின் அரசியல் பார்வை. அதற்காகவே, முதல் அல்லது இரண்டாம் கட்டமாக நம் மாநிலத் தேர்தலை நடத்தி முடித்துவிடுவார்கள். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட முதற்கட்டமாக நம் மாநிலத்தில்தான் தேர்தல் நடத்தி முடித்தார்கள்.

இந்த சட்டமன்றத் தேர்தலிலும் கவனித்துப்பாருங்கள், அதிகாரத்தை பயன்படுத்தி, எவ்வளவு சீக்கிரம் தேர்தலுக்கான அறிவிப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்துவிடுவார்கள். தேர்தல் அறிவிப்பு வந்தப் பிறகு அரசு புதிதாக எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவோ… செயல்படுத்தவோ… முடியாது. எனக்கு தெரிந்து தேர்தலுக்கு 45 நாள்களுக்கு முன்பே தேர்தல் அறிவிப்பு கொடுத்துவிடுவார்கள். அதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

எனவே, ஒரு அரசு ஆட்சியில் செயல்படும்வரை சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும். இது தி.மு.க என்றில்லை எல்லா மாநிலத்திலும், மத்தியிலும் கூட இப்படித்தான் ஒரு அரசு, அல்லது கட்சி யோசிக்கும். இந்த நடைமுறையை சாதாரண விஷயமாக மாற்றிவிட்டார்கள். உதாரணமாக, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் எனச் செய்திகள் வெளியானப் பிறகு, எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்தியாவுக்கே வரிவிலக்கு செய்து சலுகையளிக்கப்பட்டது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மத்தியிலிருந்து பீகாருக்கு வழங்க வேண்டிய தொகையை அனுப்பி, அதன் மூலம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

அவ்வளவு ஏன்… இப்போது புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் ஒரு படம் நடித்து வெளியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘இதுதான் என் இறுதிப்படம், இதற்குப் பிறகு நடிக்கமாட்டேன்’ எனக் கூறிவிட்டு ஜனநாயகன் என்றப் பெயரில் படத்தை எடுத்திருக்கிறார். பிரசாரம் போல வசனங்களை வைத்திருக்கிறார். வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தன் படத்தை ஆயுதமாக்குக்கிறார். அந்தப் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டு, அதன் மூலம் தேர்தல் அரசியலில் மக்களை அவர்பக்கம் ஈர்க்கிறார்.

இப்படி எல்லா மாநிலங்களிலும் தேர்தல் யுக்தியாக ஆளும் அரசு மக்களை ஈர்க்க சில விஷயங்களைச் செய்யும். மேலும், இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்தும்போது, எதிர்க்கட்சிகளாலும் பெரிதாக எதிர்க்க முடியாது என்பதால், துணிந்து செயல்படுவார்கள். எனவே, இனிமேலும், தி.மு.க ஏதேனும் திட்டங்களை, சலுகைகளை அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதை பயம் என்று எடுத்துக்கொண்டால் பயம், தேர்தல் யுக்தி என எடுத்துக்கொண்டால் யுக்தி. இதைப் புரிந்து கொள்பவர்களின் பார்வையில் வேறுபடும்.

இப்படி இறுதிக்கட்டத்தில் அரசு கொடுக்கும் சலுகைகளாலும், திட்டங்களாலும் மக்கள் மனம் மாறுமா என்றால்… அதுவும் சிக்கல்தான். ‘என் பணத்தைத்தானே எனக்கு கொடுத்திருக்கிறார்கள்’ என நினைப்பவர்களும் உண்டு. எனவே இதுவும் தனிநபர் பார்வை சார்ந்த விஷயம். எனவே, இதன் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தேர்தல் முடிவுதான் சொல்லும்.

ஊடகவியலாளர் லக்ஷ்மணன்
ஊடகவியலாளர் லக்ஷ்மணன்

இதுபோன்ற திடீர் திட்ட அறிவிப்புகளால் மாநில அரசின் கடன் சுமை கூடுமே என்றக் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. இது தொடர்பாக ப.சிதம்பரம் பதிவு செய்த ட்வீட் பதிவில் சிலச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். அதில், அடுத்து வரும் ஆட்சியில் நிதி நிர்வாகம் ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்து ஸ்டாலினே இந்த ஆட்சியை தொடர்ந்தாலும், அல்லது விஜய், எடப்பாடி, சீமான் மாதிரி வேறு எந்த முதலமைச்சர் வந்தாலும், இந்த கடன் சுமையை சுமந்துதான் ஆக வேண்டும். எனவே ஆட்சிக்கு வருபவர்கள் நிதி மேலாண்மையை மிகச்சிறப்பாக, கச்சிதமாக, கவனமாக கையாள வேண்டும்.

இந்தியாவுக்கே நிதி அமைச்சராக இருந்த அவர்மீது பல விமர்சனம் இருந்தாலும் கூட, பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ப.சிதம்பரத்தின் கருத்தை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும். நிதி மேலாண்மையில் கவனம் தேவை.

தி.மு.க ஆட்சியின் குறைபாடு, காங்கிரஸ் கூட்டணி குழப்பம் போன்ற காரணத்தால்தான் தி.மு.க அவசர அவசரமாக செயல்படுகிறது என்றக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதும் உண்மை. கூட்டணி என்றாலே தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படும். சின்ன சின்ன விஷயங்களை வைத்து கூட்டணியை உடைக்க முடியாது.

காங்கிரஸில் இருக்கும் சிலர் காங்கிரஸை விஜயிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். அதை எதிர்க்கும் சிலர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டே வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

கூட்டணி என வந்துவிட்டால் குழப்பம் என்பது உறுதி. நேற்று பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா, ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணியின் தலைவர் எடப்பாடி என்றோ, அல்லது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்றோ கூறவில்லை. அவரின் உரையில் ஒரு முறைகூட எடப்பாடி பெயரைக் கூறவில்லை.

ஆனால், எல்லா மாநிலத்திலும் ‘டபுள் என்ஜின் சர்க்கார்’ எனப் பிரசாரம் செய்த அமித் ஷாவும், நேற்று நடந்த கூட்டத்தில் ‘பிரதமர் மோடி நிர்வாகத்தின் கீழ் ஆட்சி வேண்டுமா? வேண்டாமா?’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

அரசியலமைப்பு சட்டப்படி பொருந்தாத வார்த்தையை சொல்லி பிரதமர் பதவியில் இருக்கும் மோடியின் தலைமையில், இங்க ஒரு ஆட்சி அமைய வேண்டும் எனச் சொல்லும் அமித் ஷா, எடப்பாடி பெயரைச் சொல்லத் தயங்குகிறார். எனவே, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிற வரைக்கும் இந்த சலசலப்புகள் எல்லா கூட்டணியிலும் இயல்புதான்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.