“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” – நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி

நியூயார்க்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர். சனிக்கிழமை இரவு புரூக்ளினில் உள்ள போதைப்பொருள் தடுப்பு முகமை சிறையில் மனைவியுடன் மதுரோ அடைக்கப்பட்டார். அதிபர் மதுரோ அடைக்கப்பட்டுள்ள சிறையானது 1990-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதும், இங்கு ஏற்கனவே ஆர்.கெல்லி, சீன் டிட்டி கோம்ப்ஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ போன்ற பிரபல குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த முதன்முறையாக சிறையில் இருந்து வெளியே பொதுவெளிக்கு கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர். அப்போது மதுரோ மற்றும் அவருடைய மனைவி சிலியா சிறைக்கைதிக்கான உடையை அணிந்திருந்தனர். மதுரோ தனது கால்களை நொண்டியபடி வந்தார். இருப்பினும் அதிகாரிகளுடன் அவர் பேசி சிரித்தபடி வந்தார்.

புரூக்ளின் சிறையில் இருந்து மான்ஹாட்டன் கோர்ட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது சுதந்திர தேவி சிலை உள்ள நியூயார்க் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். கோர்ட்டு முன்பாக பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவர்கள் கவச வாகனம் மூலமாக மான்ஹாட்டன் பெடரல் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் 92 வயது மூத்த நீதிபதி ஆல்வின் முன்பாக மதுரோ மற்றும் அவரது மனைவி உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது 25 ஆண்டுகளாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடத்தல் கும்பல்களை முடுக்கிவிட்டு அமெரிக்காவை போதைப்பொருள் விற்பனைக்கான சந்தையாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மதுரோவை ஒரு நாட்டின் தலைவராக அமெரிக்கா ஏற்கனவே கருதவில்லை என்பதாலும் அவர் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடவில்லை என தெரிகிறது.

இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்க அவருக்கு உரிமை வழங்கப்பட்டது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும் அதுவரை அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் விசாரிக்க அனுமதியளிப்பதாக கோா்ட்டு அறிவித்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சாகும்வரை சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவை பழிதீர்ப்போம்

இதனிடையே வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று பதவியேற்றார். அப்போது அவர் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுடன் உள்ளதாகவும் ஒருபோதும் போரை விரும்பவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா, “எங்களுக்கு எதிராக உடன் இருந்தே துரோகம் புரிந்துவிட்டனர். அவர்களின் துரோகம் வருங்காலத்தில் வெளிப்படுத்தப்படும். அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்” என்றார்.

முன்னதாக சுவிஸ் வங்கிகளில் உள்ள நிக்கோலஸ் மதுரோவின் ரூ.90 ஆயிரம் கோடி (10 பில்லியன் டாலர்கள்) சொத்தை முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.