சிட்னி,
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக, நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். 97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் அதிரடியில் மிரட்டினார். அவர் 91 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 36.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.