வரும் ஜனவரி 11 முதல் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் பல முக்கிய வீரர்களின் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில் இந்த தொடரில் காயத்திற்கு பிறகு திரும்பி உள்ளதாலும், ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி உள்ளதாலும் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பின்வரும் 5 வீரர்களும் அணியில் இடம் பெற்று இருக்கலாம் என்றும், இவர்களை தேவையில்லாமல் நீக்கி உள்ளனர் என்றும் சமூக வலைத்தளத்தில் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

ருதுராஜ் கெய்க்வாட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். அவர் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போதிலும், ஸ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்பியதால் அவர் வெளியேற்றப்பட்டார். முன்னாள் இந்திய வீரர் சதகோபன் ராமேஷ், “நிதீஷ் குமார் ரெட்டி போன்ற வீரருக்கு பதிலாக ரூதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஒரு ஹோம் சீரிஸுக்கு ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை” என்று விமர்சித்துள்ளார். அஸ்வின் “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு மட்டுமே ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
முகமது ஷமி
உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும், முகமது ஷமி மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 35 வயதான அவர் 2025-26 ரஞ்சி டிராபியில் நான்கு போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருப்பதால் சிராஜ் அணிக்கு திரும்பி உள்ளார். இருப்பினும் ஷமிக்கு இடம் இல்லை. ஷமி கடைசியாக இந்திய அணிக்காக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

அக்சர் படேல்
இடது கை ஸ்பின்னரான அக்சர் படேல் இந்த அணியில் இடம் பெறவில்லை. அவரது இடத்தில் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஆஃப் ஸ்பின் விருப்பமாக உள்ளார். அக்சரின் பேட்டிங் திறன்கள் அணிக்கு சமநிலையை வழங்கினாலும் அவர் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியா தொடரில் ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் இடம் பெற்றார். ஆனால் டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தும் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
திலக் வர்மா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய திலக் வர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்த தொடரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளார்.
துருவ் ஜூரல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நியூஸிலாந்து தொடரில் நீக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
About the Author
RK Spark