India vs Newzeland: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஓய்விற்கு பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா தொடரில் காயத்தால் விலகி ஓய்வில் இருந்த சுப்மன் கில், மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்த தொடரை வழிநடத்த உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கில், அணிக்கு திரும்பி உள்ளதால் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source

மூத்த வீரர்கள்
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூத்த வீரர்கள் இந்த ஒருநாள் தொடருக்கு திரும்பி வருகின்றனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். ஸ்ரேயஸ் ஐயரும் காயத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர், BCCI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸிலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றால் நியூஸிலாந்து தொடரில் விளையாடுவார். ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் ருதுராஜ் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
பும்ரா மற்றும் ஹர்திக் ஓய்வு
ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்த ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளனர். டி20 உலக கோப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளனர். பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீச CoE-யால் அனுமதிக்கப்படவில்லை, மேலும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். மறுபுறம் பும்ரா 2023 உலக கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா மார்ச் 2025ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் விளையாடி இருந்தார்.

முகமது சிராஜ் சேர்ப்பு
வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம் பெறாத சிராஜ் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார். மேலும் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு, ஜனவரி 21 முதல் 31 வரை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். மூன்று ஒருநாள் போட்டிகளும் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.
தொடர் அட்டவணை
1வது ஒருநாள் போட்டி: ஜனவரி 11, 2026 – BCA ஸ்டேடியம், வடோதரா
2வது ஒருநாள் போட்டி: ஜனவரி 14, 2026 – சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட்
3வது ஒருநாள் போட்டி: ஜனவரி 18, 2026 – ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்
இந்திய அணி வீரர்கள் பட்டியல்
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகம்மது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
RK Spark