Mohammad Kaif : ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என யூடியூப் சேனல் ஒன்றுக்கு முகமது கைப் பேட்டியளித்துள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளதாகவும், உடனடி மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் கிரிக்கெட்டின் சமநிலை சீர்குலையும் என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார். ராஜீவ் மக்னி (Rajiv Makhni) உடனான நேர்காணலில் பங்கேற்ற முகமது கைப், ஐபிஎல் விதிகளில் தான் விரும்பும் இரண்டு மிக முக்கியமான மாற்றங்களை முன்வைத்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
50 மீட்டர் பவுண்டரியா?
சமீபகாலமாக ஐபிஎல் போட்டிகளில் 250 முதல் 280 ரன்கள் வரை குவிக்கப்படுவது பந்துவீச்சாளர்களைத் திகைக்க வைத்துள்ளது. இது குறித்துப் பேசிய கைப், “மைதானத்தின் அளவை முதலில் சீரமைக்க வேண்டும். தற்போது 50-55 மீட்டர் அளவில் பவுண்டரிகள் வைக்கப்படுகின்றன. இது பந்துவீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இவ்வளவு சிறிய மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்கிறார்கள். 150-170 ரன்களைக் கூடத் தற்காத்துக் கொள்ள முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு Fair Chance கிடைக்க வேண்டும் என்றால், மைதானத்தின் அளவை பிசிசிஐ பெரியதாக மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம்
கடந்த சில சீசன்களாக விவாதப் பொருளாக இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்தும் கைஃப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “இந்த இம்பாக்ட் பிளேயர் விதி பந்துவீச்சாளர்கள் மீதான மரியாதையைக் குறைக்கிறது. ஒரு அணிக்குத் தேவைப்படும்போது கூடுதல் பேட்ஸ்மேனைக் கொண்டு வர இந்த விதி வழிவகை செய்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் கிடையாது. அப்படி இருக்கும்போது ஐபிஎல் தொடரில் மட்டும் ஏன்? இதை உடனடியாக நீக்க வேண்டும்” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்:
விமர்சனங்களை ஒருபுறம் அடுக்கினாலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கைப் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். “இந்திய கிரிக்கெட் பிரகாசமாக உள்ளது. கவாஸ்கர், சச்சின், விராட் கோலி வரிசையில் இப்போது சுப்மன் கில் போன்ற மிகச்சிறந்த வீரர்கள் வந்துவிட்டனர். ஐபிஎல் மூலம் இளம் வீரர்கள் அழுத்தமான சூழலில் விளையாடப் பழகிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் வெளிநாடுகளின் கிரிக்கெட் தரம் சற்று சரிந்து வருகிறது, இது இந்தியாவுக்குச் சாதகமான விஷயம்” என்றும் முகமது கைப் தெரிவித்தார்.
முன்னாள் பிளேயர்கள் மீது குற்றச்சாட்டு
இந்தப் பேட்டியில் இன்னும் சில அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முகமது கைப் கூறியுள்ளார். ஒரு சர்வதேச தொடரில் விளையாட வேண்டாம் என பிளேயர்கள் நினைத்தால், இந்திய அணியின் பிஸியோவுடன் கூட்டு சேர்ந்து காயம் என பொய் கூறிவிடுவார்கள் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். மேலும், தோனி தன்னுடைய நண்பர்களுக்கு மட்டுமே அணியில் முக்கியத்துவம் கொடுத்ததாகவும் கூறியிருக்கும் முகமது கைப், அவர் ஒரு குறுகிய வட்டத்தில் உள்ளவர்களிடம் மட்டுமே பழகுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சிறந்த பீல்டராக இருந்தது எப்படி?
இந்திய அணியின் சிறந்த பீல்டராக இருந்தது எப்படி என்றும் முகமது கைப் தெரிவித்துள்ளார். இயல்பாகவே வேகமாக ஓடும் பழக்கமும், சிறந்த பிட்னஸ் இருந்ததால், பீல்டிங் குறித்து பின்னாளில் கற்றுக் கொண்டதாக கூறியுள்ள கைப், ஆரம்பத்தில் பீல்டிங் குறித்த எந்த டெக்னிக்கும் தெரியாது என வெளிப்படையாக கூறியுள்ளார். விளையாடும் நேரத்தில் வேகமாக ஓடியதாகவும், பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி டைவ் அடிக்க கற்றுக் கொண்டதாகவும் கைப் தெரிவித்துள்ளார்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More