பெண்கள், மாணவர்களுக்கு இலவச மொபைல் – மத்திய அரசின் அதிரடி திட்டம்! உண்மையா?

PM Free Mobile Yojana: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசு மாணவர்கள், பெண்கள் எல்லோருக்கும் இலவசமாக மொபைல் வழங்க இருப்பதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வாட்ஸ்அப்களில் “பிரதான் மந்திரி இலவச மொபைல் யோஜனா” திட்டம் குறித்த செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கூடவே ஒரு லிங்கும் அனுப்பப்பட்டு, இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மையா?, இது குறித்து மத்திய அரசு கொடுத்திருக்கும் விளக்கம் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.  

Add Zee News as a Preferred Source

மத்திய அரசு விளக்கம் 

இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்களின் வளர்ச்சி எந்தளவுக்கு நன்மைகளைத் தருகிறதோ, அதே அளவுக்கு போலிச் செய்திகளின் பரவலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் “பிரதான் மந்திரி இலவச மொபைல் யோஜனா” (PM Free Mobile Yojana) என்ற தகவல் முற்றிலும் பொயானது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

December 30, 2025

சமீபகாலமாக யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன்களை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்த இலவச செல்போனைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த வீடியோக்களில் ஆசை வார்த்தைகள் கூறப்படுகின்றன. குறிப்பாக, கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

பொதுமக்கள் ஏமாற வேண்டாம்

இந்தத் திட்டத்தைப் பெற விரும்புவோர் சில குறிப்பிட்ட இணையதள லிங்குகளை (Link) கிளிக் செய்ய வேண்டும் என்றும், அங்கு தங்களின் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டும் என்றும் மோசடி கும்பல் வலியுறுத்துகிறது. அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தத் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், சாதாரண பொதுமக்கள் இதனை உண்மை என நம்பி தங்களின் விவரங்களைப் பகிர்ந்து விடுகின்றனர்.

இலவச மொபைல் திட்டம் பொய்யானது

இது குறித்து மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB), எக்ஸ் தளத்தில் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. அதில், “பிரதான் மந்திரி இலவச மொபைல் யோஜனா” என்ற பெயரில் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்றும், இது முற்றிலும் ஒரு மோசடி வேலை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற போலியான இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி கும்பலின் டார்கெட்

இந்த மோசடி லிங்கில் நீங்கள் பதிவிடும் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வைத்து, உங்களின் வங்கி கணக்குகளை முடக்கவோ அல்லது உங்களின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், பதிவு செய்யக் கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகையை ஆன்லைனில் செலுத்தச் சொல்லியும் மோசடிகள் நடக்கின்றன. எந்தவொரு அரசுத் திட்டமும் பயனாளிகளிடம் இருந்து ஓடிபி அல்லது வங்கி விவரங்களைக் கேட்பதில்லை.

பொதுமக்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தெரியாத நபர்களிடம் இருந்தோ அல்லது வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தோ வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அரசு பெயரில் வரும் அந்த தகவல் உண்மையானதா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை நீங்களே சரிபார்க்க வேண்டும். நீங்கள் சரிபார்க்காத எந்தவொரு தகவலையும் முழுமையாக நம்பாதீர்கள்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.