`கொலஸ்ட்ரால்-ன் அவசியமும் ஆபத்தும்… அதிமருந்தாகும் பூண்டு!' – விளக்கும் மருத்துவர்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் நேரம் இல்லாத காரணத்தால், சீக்கிர உணவு (fast food) மற்றும் எண்ணெய், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சேருவதற்கு காரணமாகின்றன.

நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன் வெளியிட்ட ஆய்வுகளில் பூண்டை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சுமார் 7% வரை கொலஸ்ட்ரால் குறைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் அரை முதல் ஒரு பல் பூண்டு நேரடியாக சாப்பிடுவது பரிந்துரை செய்யப்படுகிறது.

இது குறித்து விவரிக்கும் மருத்துவர் ராஜேஷ்,

“கொலஸ்ட்ரால் என்பது மனித உடல் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற இயல்பான பொருள் ஆகும். இது உயிரணு சவ்வுகள் மற்றும் டெஸ்டோஸ்டெரோன், எஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டெரோன் போன்ற சில முக்கிய ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.

அதேபோல் , வைட்டமின் டி உருவாக்கத்தில் முதல் படியே 17-டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் (17-dehydrocholesterol) என்பதுதான். தோலின் உள்ளே உள்ள இந்த கொலஸ்ட்ரால் தான் சூரிய UVB (Ultraviolet B) கதிர்வீச்சின் தூண்டுதலால் விட்டமின் டி-யாக மாற்றப்படுகிறது.

கொலஸ்ட்ராலின் இரகசியம்!

கொலஸ்ட்ரால் என்பது ஒரு கெட்ட பொருள் அல்ல அது மனித உடலில் அத்தியாவசியமான ஒன்று.

மருத்துவர் ராஜேஷ்

கொலஸ்ட்ரால் மற்றும் அதன் வகைகள்!

ரத்தத்தில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. “கெட்ட கொலஸ்ட்ரால்” எனப்படும் LDL மற்றும் “நல்ல கொலஸ்ட்ரால்” எனப்படும் HDL ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு அவசிய தேவையாகும்.

கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படுவதால் அவை உடலுக்குத் தேவையற்றவை கிடையாது. உடலில் புது செயல்கள் உருவாவதற்கும், செல்களில் சீரமைப்பு வேலைகள் நடப்பதற்கும் தேவையான கொலஸ்ட்ராலை பரப்புவதும்… எடுத்துச் செல்வதும் இந்த LDL கொலஸ்ட்ரால் தான்.

ஆனால் உடலில் தேவைக்கு ஏற்றபடியான அளவில் இல்லாமல் மிகுதியாக இருந்தால்தான் இந்த LDL கொலஸ்ட்ரால் அகற்றப்படாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்போது, ரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இந்த நடைமுறைதான் குழாய்களின் உட்புறம் படிந்து தடைகள் உருவாகி, ரத்த ஓட்டம் குறைவதைக் குறிப்பிடும் atherosclerosis நிலை எனப்படும். எனவே அவை சீரான அளவில் இருக்கும் வரை உடலுக்கு நன்மை பயக்கும். அதிகமாகும் பட்சத்தில்தான் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பூண்டு எவ்வாறு கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது!

பூண்டில் உள்ள “அல்லிசின்” போன்ற மூலக்கூறுகள் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேஷன் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள “கெட்ட கொலஸ்ட்ரால்” அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைக்க உதவும்.

ஒரு சில ஆய்வுகள் காட்டும் முக்கிய கருத்து என்னவெனில், பூண்டை ஒரு சில மாதங்கள் தொடர்ந்து எடுத்தால், கொலஸ்ட்ரால் அளவுகளில் கணிசமான முன்னேற்றம் காணப்படுகிறது.

பூண்டு கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டின் பயனுள்ள இயற்கை வழியாகும். ஆனால் அதிக அளவில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை பெறாமல் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தல் ரத்த அழுத்தத்தை மிகவும் குறைத்துவிடும் அபாயம் உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

பச்சை பூண்டு சாப்பிடுவதால் பல மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற சல்பர் அடிப்படையிலான கலவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்படுகிறது, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது, குடல் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது, உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.

பூண்டைக் கடித்து அல்லது நறுக்கும் போதுதான் அல்லிசின்( Allicin) வெளிப்படும். அப்படியே சமைத்தால் அதன் அளவு குறையும். மொத்தத்தில் உணவுகளில் பூண்டை சேர்த்து சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்” என்கிறார் மருத்துவர் ராஜேஷ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.