`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' – 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் தங்கப்பதக்கம் வென்ற அங்குஷ் பரத்வாஜ் என்பவர் பயிற்சி கொடுத்து வருகிறார்.

அங்குஷ் சொந்தமாக பயிற்சி அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். 17 வயது வீராங்கனையிடம், `உனது திறமையை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கூறி அவரை பரிதாபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அங்குஷ் அழைத்தார். போட்டி முடிந்த பிறகு வீராங்கனை அவர் அழைத்த ஹோட்டலுக்கு சென்றார்.

அங்கு திறமையை ஆய்வு செய்வது போல் வீராங்கனையிடம் மோசமாக நடந்து கொள்ள முயன்றார். ஆனால் அதற்கு வீராங்கனை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி வீராங்கனையை அங்குஷ் பாலியல் வன்கொடுமை செய்த்விட்டார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் உனது விளையாட்டு எதிர்காலத்தை ஒரே அடியாக அழித்துவிடுவேன் என்று கூறி மிரட்டி அனுப்பி வைத்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட வீராங்கனை இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் அங்குஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பரிதாபாத் போலீஸ் செய்தித்தொடர்பாளர் யஷ்பால் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட துப்பாக்கிச் சுடும் வீராங்கனை போலீஸில் அளித்த புகாரில், தனது பெற்றோர் நொய்டாவில் வசிப்பதாகவும், தான் சண்டிகரில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் 2017ம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், மேலும் கடந்த ஆண்டு தான் அங்குஷ் பரத்வாஜிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்காகப் பல நகரங்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 16 அன்று, டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வீராங்கனை கலந்து கொண்டார்.

போட்டி முடிந்ததும் அவர் புறப்படவிருந்தபோது, ​​பரத்வாஜ் அவரை அழைத்து, அவரது செயல்பாடு குறித்துப் பேசுவதற்காக காத்திருக்குமாறு கூறினார். பின்னர், அவர் மீண்டும் அழைத்து, பரிதாபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். அவர் விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தபோது, ​​பரத்வாஜ் அவரைத் தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

யார் இந்த பரத்வாஜ்?

அங்குஷ் பரத்வாஜ் 2008 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஊக்கமருந்துப் பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்ததால், இந்திய விளையாட்டு ஆணையம் அவரைத் தடை செய்தது. அப்போது அங்குஷ், லேசான தலைவலிக்கு மருந்து எடுத்துக்கொண்டதாகவும், அது சோதனை முடிவை பாதிக்கும் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தார்.

அவர் 2012-ல் மீண்டும் களமிறங்கி, சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார். பரத்வாஜ் தற்போது மொஹாலியில் வசித்து வருகிறார். சொந்தமாக சால்வோ துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்திற்குப் பல கிளைகள் உள்ளன. இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட 13 தேசிய பிஸ்டல் பயிற்சியாளர்களில் பரத்வாஜும் ஒருவர். அவர் இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற அஞ்சும் மௌட்கிலை மணந்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகாரை தொடர்ந்து அவரை இந்திய துப்பாக்கி சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.