மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்..

மக்கள், இயற்கை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய மாதவ் காட்கில், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகச் செயலாற்றினார். 2010-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காட்கில் ஆணையம் என்று பிரபலமாக சூழலியல் நிபுணர் குழுவின் (WGEEP) தலைவராகவும் இருந்தார்.

மாதவ் காட்கில்
மாதவ் காட்கில்

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற மாதவ் காட்கில், உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் சிற்பிகளில் ஒருவராகவும், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். இவரின் மரணம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “தென்னிந்தியாவில் வாழக்கூடிய மனிதர்களுக்கு மட்டுமல்ல, உயிர்களுக்கு, தன்னுடைய அம்மாவை விட உன்னதமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது மேற்குத்தொடர்ச்சி மலைகள்தான்.

யுனெஸ்கோவால் “biodiversity heritage hottest of the hotspot” என்று அங்கீகாரம் பெற்ற மேற்கு மலைகள், நம்முடைய  செயல்பாடுகளால் கடந்த 250 ஆண்டுகளாக கடுமையான நெருக்கடியை சந்தித்துவருகின்றன. அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக, அணைகள், மின்திட்டங்கள், சாலைகள், சுரங்கங்கள் என கட்டுமானங்களின் பெயரில் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன.   மீதம் இருக்கின்ற மேற்கு மலைகளை பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2010-ம் ஆண்டு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் “உயர்மட்ட வல்லுநர்” குழுவை அமைத்தது.

மாதவ் காட்கில்
மாதவ் காட்கில்

2011-ம் ஆண்டு இந்த குழு தன்னுடைய அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தது . மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க இந்த அறிக்கையை அமல்படுத்தவேண்டும் என பல்வேறு அமைப்புகள், சூழலியல் நிறுவனங்கள் என எல்லோரும் குரல் கொடுத்தார்கள். இந்த அறிக்கையை தயாரிக்க திரு.காட்கில் அவர்களின் கால்கள் அந்த மலைத் தொடரில் படியாத இடங்களே இல்லை என சொல்லலாம். அனைத்து பகுதிகளுக்கும் சென்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து இந்த அறிக்கையை கொடுத்தார் காட்கில். வல்லுநர் குழுவின் அறிக்கையை பார்த்தலே தெரியும் அவருடைய மெனக்கெடல்.

எந்த மாநில அரசும் அவர் சொன்னதை நடைமுறை படுத்தவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால் அவர் எந்த இடங்களை பாதுகாக்க சொல்லி இருந்தாரோ அந்த இடங்களை பாதுகாத்து இருந்தால் “வயநாடு நிலச்சரிவு” உள்ளிட்ட பெருந்துயரங்களை நாம் சந்தித்து இருக்கமாட்டோம். மக்களோடு பழகி, உரையாடி அவர்களுக்கான அறிவியலாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் தான் அவருடைய மகிழ்வின் உயரம்.

சுந்தரராஜன்
சுந்தரராஜன்

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வே யின் “வேள்பாரி நாவல்” என்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, அதில் பாரியின் இயற்கை குறித்த புரிதல், அதன் பின்னால் இருந்த அறிவியல் பாங்கு, அவன் வாழ்ந்த மேற்கு மலை தொடர்களின் சூழலியல் அழகு என, மெய்சிலிர்க்க அவர் எழுதி இருப்பார். பாரிக்கு பிறகு மேற்கு மலைத் தொடர்களை அதிகம் நேசித்த நபராக இருப்பார் திரு.காட்கில்.

திரு.காட்கில் அவர்களுடைய மரண செய்தி, என்னை போன்றவர்களை  கடும் துயரத்தில் ஆழ்த்துகிறது, கோவையில் அவரை சந்தித்த நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது, மேற்கு மலைகளை பாதுகாக்க, அவர் வலியுறுத்திய ” மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம்” அமைப்பது தான்.   நாம் எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும், செய்வோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.