ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் மகன் மரணம்

உலக அளவில் கனிமம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது வேதாந்தா நிறுவனம். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்தான், தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையையும் நடத்தி வந்தது. வேதாந்தா குழுமத்தின் உரிமையாளராக அனில் அகர்வால் உள்ளார்.

இவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் ( வயது 49)வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார். இவர் அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூ யார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவலை அனில் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அனில் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: –

இன்று என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார். அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வந்தார்.

மோசமான நிலை கடந்துவிட்டது என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் விதி வேறு விதமான திட்டங்களை வைத்து இருந்தது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது. தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. நாங்கள் ஈட்டும் வருமானத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பித் தருவதாக அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன். இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.