மிஸ்ஸிஸிப்பி,
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் ஜாக்சன் பகுதியில் இருந்து 150 மைல்கள் வடமேற்கே வெஸ்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு மேற்கே செடார்பிளப் என்ற இடத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மாமா மற்றும் சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, சகோதரரின் காரை திருடி கொண்டு, பிளேக் ரோடு பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் துப்பாக்கி முனையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். எனினும், அந்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பினார். அதே பகுதியில் 7 வயதுக்குட்பட்ட மற்றொரு சிறுமியை கொல்லவும் முயற்சித்து உள்ளார். பின்னர் விட்டு விட்டார்.
இதன்பின்னர் சிலோவம்-கிரிப்பித் சாலைக்கு சென்ற அந்த நபர் எதிரே வந்த 2 சகோதரர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார். அவர்களில் ஒருவர் உள்ளூர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அவரை தேடி வந்தனர். அதிகாலை 3 மணியளவில் அவரை பிடித்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டில் இல்லாத வகையில் பெரிய அளவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டில் மிஸ்ஸிஸிப்பியில், மிக பெரிய அளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள்.